கட்டுரைக் களஞ்சியம்
கட்டுரைக் களஞ்சியம், முனைவர் மு. இளங்கோவன், வயலவெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), அரியலூர் 612 901, பக். 160, விலை 150ரூ.
செம்மொழித் தமிழ் ஆய்வு இளைஞர் விருது பெற்றவர் நூலாசிரியர். 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கிரந்த எழுத்துக்கள் பற்றிய முதல் கட்டுரையும், இறுதிக் கட்டுரையும் அறிஞர்கள் சிந்தனைக்குரியவை. கிரந்த எழுத்துக்களை நீக்கித் தமிழில் எழுத முடியும் என்பதே உண்மை. தமிழில், எழுத்துச் சீர்திருத்தம் இனியும் வேண்டுவதில்லை. 1978ல் தமிழக அரசு செய்த மாற்றம் போதுமானது. நடைமுறையிலும் பழகிவிட்டது. இனியும் சீர்திருத்தம் நாடிக் காலம் போவதை விடத் தமிழ் மொழி, தமிழ்ப் பிள்ளையர்க்குக் கட்டாய பாடமாதலும் இன்றியமையாதது. பெருஞ்சித்திரனார், பாவேந்தர், தி.வே.கோபாலையர், பொ.வே. சோமசுந்தரனார், ஈழத்துப் பூராடனார், தென்னாப்பிரிக்கத் துரையனார் அடிகள் போன்ற அறிஞர்களின் கருத்துக்கள், நூலில் விளக்கம் பெறுகின்றன. ஒப்பாரிப் பாட்டு பற்றியும், ஆராயப்பட்டுள்ளது. உயர்கல்வி உயர வழிகள் சிந்திக்கப்பட்டுள்ளன. பல வகையாலும், பயன்மிக்க கட்டுரைகள் கொண்ட நூல். -கவிக்கோ ஞானச் செல்வன்.
—-
இந்திய ஆங்கில இலக்கிய வரலாறு, ஆங்கில மூல நூல்-எம்.கே. நாயர், தமிழாக்கம்-வெ.அயோத்தி மற்றும் கு.குணசேகரன், சாகித்ய அகடமி, புதுடில்லி 110001, கிடைக்குமிடம்-குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, சென்னை 600018, பக். 534, விலை 260ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-4.html
இந்திய நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலர், ஆங்கில இலக்கியங்களைப் படைத்துள்ளனர். ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, அரவிந்த்கோஷ், ராம் மோகன் ராய், ஆர்.கே. நாராயணன், குஷ்வந்த்சிங், கிருஷ்ணமோகன் பானர்ஜி, கமலாதாஸ் போன்ற பலரும் எழுதிய ஆங்கில இலக்கியங்களின் சிறப்புகள் விளக்கப் பெற்றுள்ளன. அரவிந்தரின் கவிதை நூல்கள் கதை சொல்லும் பாங்கில் அமைந்து சிறப்புப் பெறுகின்றன. ஆங்கில மொழியில் வெளிவந்த நாவல்களில் ஒன்றை எழுதிச் சிறப்புப் பெற்றவர், வங்கள நாவலாசிரியர் பக்கிம் சந்திர சட்டர்ஜி. அவர், ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைத் தொகுப்புகளும், சிறந்த இலக்கியங்களாக இன்று திகழ்கின்றன. இந்திய எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் எழுதிய உரைநடை, நாடகம், கவிதை, சிறுகதை, புதினம் (நாவல்), வாழ்க்கை வரலாறு முதலியவை, சிறந்த இலக்கியங்களாகத் திகழ்கின்றன என்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். நேருவின் சொற்பொழிவுகளும், கடிதங்களும் இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன. இந்நூலைப் படித்தால், இந்திய எழுத்தாளர்களை எண்ணிப் பெருமை கொள்ளலாம். நூலாசிரியர் பாராட்டுக்குரியவர். பயனுள்ள நல்ல நூல். -பேராசிரியர் ம.நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 8/12/13.