இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்)
இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்), ஜே.எம். சாலி எம்.ஏ, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 110ரூ.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் இந்நூலாசிரியர், உலக முஸ்லிம்கள் தன் உயிரினும் மேலாக ஏற்றிப் போற்றும் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்திய வேதங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளை இந்நூலில் தொகுத்துள்ளார். உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதர்களை நாம் அனுப்பியிருக்கிறோம் – என்பது திருக்குர் ஆன் வசனம். அதன்படி ஆதிமனிதர் முதல் இதுவரை 125000க்கும் அதிகமான இறைத் தூதர்கள் உலகிற்கு இறைவனால் அனுப்பப்பட்டு, மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டப்பட்டதாக இஸ்லாம் கூறுகிறது. அப்படி வந்த இறைத் தூதர்கள், தங்களைவிட சிறப்புமிக்க தூதுர் ஒருவர் வருவார். அவர் எல்லா சமுதாயத்திற்குமானவர். அவரை புறக்கணித்துவிடாதீர்கள் என்ற ரீதியில் தங்களது சமுதாயத்தினருக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அந்த வகையில் யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களில் முஹம்மது நபியைப் பற்றிய செய்திகள் உள்ளதுபோல், இந்திய வேதங்களான ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களிலும், பவிஷ்யம், பாகவதம் போன்ற புராணங்களிலும் பகவத்கீதையிலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி பிறப்பு முதல் அனைத்துச் செய்திகளும் கூறப்பட்டுள்ளன என்று கூறி, அவற்றையெல்லாம் இநந்நூலாசிரியர் மேற்கோள் காட்டி (ஸ்லோகங்கள் மற்றும் ஸ்லோக எண்களுடன்) இந்த தனது கருத்துக்களை, அவர் எளிய முறையில் விளக்கியுள்ளார். தவிர, இந்தியாவின் சிறப்பைப் பற்றி நபிகள் நாயகம் கூறம் செய்திகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. படிக்கப் படிக்க ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நூலாக இது உள்ளது. -பரக்கத் நன்றி: துக்ளக், 18/12/13.
—-
பகத்சிங், என். சொக்கன், சிக்ஸ்த் சென்ஸ், 10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 125ரூ. To buy this tamil book online – www.nhm.in/shop/100-00-0002-186-8.html
இந்திய சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் மகாத்மா காந்தி நடத்திக் கொண்டிருந்தவேளையில், கையில் துப்பாக்கி ஏந்தினால்தான் வெள்ளையர்களை விரட்ட முடியும் என்று சில இளைஞர்கள் எண்ணினார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் இருவர். தெற்கே வாஞ்சிநாதன், வடக்கே பகத்சிங். வெள்ளையர்கள் நடத்திய தடியடியில் காங்கிரசின் மூத்த தலைவர் லாலா லஜபதி ராய் கொல்லப்படுகிறார். இதற்கு பழிக்குப் பழி வாங்க சபதம் செய்கிறார் பகத்சிங். ஒரு வெள்ளைக்காரரை சுட்டுக் கொல்கிறார். பாராளுமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசுகிறார். அதனால் அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. தூக்குக்கயிறை முத்தமிட்டு மரணத்தைத் தழுவியபோது, பகத்சிங்குக்கு வயது 23தான். பகத்சிங்கின் வீர வரலாற்றை, நெஞ்சைத் தொடும்படி எழுதியிருக்கிறார் என். சொக்கன். நன்றி: தினத்தந்தி, 11/12/13.