கன்னியாகுமரி மாவட்டம் அரசியல் – சமூக வரலாறு
கன்னியாகுமரி மாவட்டம் அரசியல் – சமூக வரலாறு, தொகுப்பாசிரியர்-செ.தங்கமணி, கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றுப் பேரவை, 33, உட்க சாலை, சென்னை 2, பக். 240, விலை 200ரூ.
கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றை பல்வேறு கோணங்களில் விவரித்துச் சொல்லும் நூல். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் கி.மு. 4000 ஆண்டுகால தடயங்கள் கிடைத்துள்ளன. எனவே அக்காலத்திலேயே மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர் என்கிறது இந்நூல். ஆய்நாடு, பண்ணை சமூக அமைப்பு முறை, சங்காலத்திலும் அதற்குப் பின்பும் குமரி மாவட்டத்தில் நடந்த போர்கள், மக்கள் உரிமை இயக்கங்கள், தோள்சீலைப் போராட்டம் என கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றின் பல பரிமாணங்கள் விளக்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கி வரும் வேம்படி மாடன் கதை, பூலங்கொண்டான் கதை, வெங்கலராசன் கதை போன்ற நாட்டுப்புறக் கதைகளில் வரும் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றை ஆராயும் கட்டுரையும் உள்ளது. குமரி மாவட்ட வரலாற்றை எழுதுவதில் உள்ள இடர்ப்பாடுகள், குமரி மாவட்ட வரலாற்றை எழுதியவர்கள் செய்த இருட்டடிப்புகள் பற்றியும் தெரிந்து கொள்ளமுடிகிறது. தென் எல்லை மீட்டுப் போராட்ட வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றுடன்கூட, குமரி மாவட்டத்தில் வழங்கும் அருந்தமிழ்க் கலைச்சொல் பற்றிய ஆராய்ச்சி நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது. நன்றி:தினமணி, 21/1/2012.
—-
வழக்கு மன்றத்துக்கு வந்த தெய்வங்கள், அருண் சரண்யா, கல்கி பதிப்பகம், 47-NP, ஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32.
பக்தர்களுக்கு ஓர் இன்னல் என்றால் தெய்வங்கள் சும்மா இருக்குமா? அருணகிரியாருக்காக முருகக் கடவுள் வழக்கு மன்றத்திற்கு வந்த கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல ஆதிசங்கரர் சரஸ்வதி, சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான், தருமி சிவன், திருநீலகண்டர் சிவன், திரௌபதி கிருஷ்ணன், பிரகலாதன் திருமால், கம்பர் கலைவாணி என்று பக்தர்களுக்காக வழக்கு மன்றங்களுக்கு தெய்வங்கள் வந்து வழக்காடிய கதைகள் படிக்க சுவாரஸ்யம்மிக்கவை. தீபம் ஆன்மிக இதழில் தொடராக வந்ததை நூலாக கொண்டு வந்திருக்கிறார்கள். கதைகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 5/12/2012.