திராவிடமா, தீரா விடமா?
திராவிடமா, தீரா விடமா? (முதல் பாகம்), ஓவியப் பாவலர் மு. வலவன், முத்தையன் பதிப்பகம், 35, மணிகண்டன் தெரு, உதயா நகர் (விரிவு), போரூர், சென்னை 600116, பக். 296, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-159-4.html
இந்நூலாசிரியர், பல நூல்களை எழுதியுள்ளார். வாழ வழி காட்டிய வள்ளல் என்ற வள்ளலார் பற்றிய இவரது நூல் தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. இந்நூலில் திராவிட இயக்கங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், தனது மாணவப் பருவத்தில் தி.மு.க. வெறியனாக இருந்து உழைத்ததற்காக வருத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழனைப் படிக்க வைத்த காமராஜும், குடிக்க வைத்த கருணாநிதியும் என்று தொடங்கும் கட்டுரை முதல் தமிழகத்தின் இருண்ட காலம் எது என்பது வரை 21 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் ஈ.வே.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரால் தமிழ்-தமிழர், தமிழ்நாடு அடைந்த துன்பங்களை, இழிவுகளை, இழப்புகளை ஆதாரத்துடன் விளக்குகிறார். இவர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி திருமணம் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கும் மக்களிடம் பணம் வசூல் செய்தது. இரட்டை வேடம் போட்டது. பெரியார் பேசிய சீர்த்திருத்தக் கருத்துக்களில் பெரும்பாலானவை ராமலிங்க வள்ளலார் கூறியவற்றிலிருந்து திருடியது. காவிரி கையை விட்டுப்போனது. பாலாறு பாழறானது. முல்லைப் பெரியாறு இல்லை என்று ஆனது… முதலான பல செய்திகளை ஆதாரபூர்வமாக அக்குவேறு ஆணிவேறாக ஆசிரியர் இந்நூலில் அம்பலப்படுத்தியுள்ளார். -பரக்கத். நன்றி: துக்ளக், 7/8/2013
—-
திருக்குறள் அறிவுறுத்தும் மேலாண்மைத் திறமைகளும் நவீன கணினிகளின் பயன்களும், பேராசிரியர் டி.ஏ, ஆதிகேசவன், நர்மதா பதிப்பகம், பக். 208, விலை 100ரூ.
திருக்குறள், மேலாண்மைத் திறமைகளும், கணினியின் பயன்கள் ஆகிய மூன்றையும், ஒரு சேர ஆராய்ந்து முப்பரிமாணத்தை இந்த நூல் காட்டுகிறது. அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள திருக்குறள் கருத்துக்கள், நிர்வாக மேம்பாட்டிற்கும், கணினி பயன்பாட்டிற்கும் எவ்வாறு உதவுகின்றன என்பதை, 55 தலைப்புகளில் எழுதியுள்ளார். திட்டமிடுதல், நேர மேலாண்மை, சாதாரண தொடர் கல்வி, மதிநுட்ப மேம்பாடு, மறதியின்மை, நேர்மை நோயறிதல் போன்ற வாழ்வுக்கு உதவும் வள்ளுவர் வழிகள் காட்டப்பட்டுள்ளன. செய்ய வேண்டியவற்றைச் செய்யாமையும், செய்யக் கூடாததைச் செய்வதும் கெடுதலாகும் என்ற, 466 குறளுக்கு, மேலாண்மைத் திட்டங்களில் பட்டியல் தயாரித்து செய்ய வேண்டும் என்றும், கணினியில் இதைச் சரியாகப் பதிவு செய்யும் விளக்ம் பற்றியும் எழுதியுள்ளார். இணையம், மின்அஞ்சல், மின்வணிகம் ஆகிய கணினி வழியே, இன்று மின்னல் வேகத்தில் வணிகம் செய்யும் முறையும், அதைப் பயிலும் வகையும், 675 குறள் வழி ஒப்பிடுகிறார் நூலாசிரியர். முன்னுரையில் திருக்குறள் எழுதி, 2000 ஆண்டுகள் ஆகின்றன என்பது, 2044 என்று இருந்திருக்க வேண்டும். 55 தலைப்புகளில் 57 குறளை மையப்படுத்தி மேலாண்மை கணினியை ஒப்புமைப்படுத்தி எழுதியுள்ள நூல் இது. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர்,1/9/2013.
