சமயங்களின் அரசியல்
சமயங்களின் அரசியல், முனைவர் தொ. பரமசிவன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை, விலை ரூ.85. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html
வரலாற்றின் கொதிநிலை சமயங்கள், தொன்மங்கள் குறித்த தனது பார்வை மூலம் தமிழ்ச் சமூகம் குறித்த புரிதலை வழங்குகிறார் தொ.பரமசிவன். நமது சமூகம் குறித்த புரிதலுக்கான முக்கிய அடிப்படையாக இருக்க வேண்டிய சமயங்கள் குறித்த சமூகவியல் ஆய்வும் புரிதலும் மங்கி வரும் காலக் கட்டம் இது. காணாமல் போன அந்த வரலாற்றின் பக்கங்களை நமக்கு வாசிக்க எடுத்துத் தரும் அரிய ஆளுமைகளில் ஒருவரான முனைவர் தொ. பரமசிவனின் மற்றொரு நூலான சமயங்களின் அரசியல் ஒரு கோடை மழையில் அரும்பிய மலர்போல காட்சியளிக்கிறது. தனது வழக்கமான பாணியில் ஒவ்வொரு பக்கத்திலும் அடைப்பட்ட பல மனக் கண்களை திறந்து வைக்கிறார் தொ.ப. இந்தப் புத்தகம் இரண்டு பகுதிகளாக உள்ளது. முதல் பாகத்தில் சமணத்தையும் பௌத்தத்தையும் அழித்துவிட்டு சைவமும் வைணவமும் மேலெழுந்த வரலாறு சமூகவியல் பார்வையுடன் விவரிக்கப்படுகிறது. வெறுமனே பெரு தெய்வங்களோடு நின்றுவிடாமல் நாட்டார் தெய்வங்கள் வரை அலசும் தொ.பவின் பார்வைகள் வரலாற்று, சமூகவியல் மாணவர்களால் உற்று நோக்கப்பட வேண்டியவை. பல ஆர்வமூட்டும் தத்துவார்த்த, சமூக குறிப்புகள், செய்திகளையும் இவற்றினூடே வழங்குகிறார் நூலாசிரியர். புத்தகத்தின் பிற்பகுதியில் பேராசிரியர் சுந்தர் காளியுடனான நீண்ட விவாதத்தில் இறங்குகிறார். நமது பேச்சு பாரம்பரியத்தின் விரிவும் ஆழமும் குறித்த சிறிய அடையாளத்தை இந்த உரையாடல் தருகிறது. இதில் விவாதிக்கப்படும் பல சமூகவியல் கருத்துகளை, விவாதங்களை புரிந்துகொள்ள ஒரு சாமானிய வாசகர் பலமுறை வாசிக்க நேரலாம். தமிழகத்தில் ஏன் மத அடிப்படைவாதம் வேர்கொள்ள முடியவில்லை. இங்கு பாசிகம் தலையெடுக்குமா என்பது போனற அடிப்படை அரசியல் சமூகக் கேள்விகளுக்கு பதில் தேடுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. ஏனெனில் அவற்றுக்கான ரகசியங்கள் நமது சமயங்களின் வரலாற்றில் அடங்கியுள்ளன. மற்றதை நிராகரிக்காத மரபுவழி வழிபாட்டு நெறிகள், குறிப்பாக தாய்த் தெய்வ வழிபாட்டு நெறிகளே அதற்குக் காரணம் என்று அவர் கருதுகிறார். இந்து மத மேல்நிலையாக்கம், சாதிப் பிளவுகள், ஆணாதிக்கம் அத்தனையையும் தாண்டி இந்த சமூகத்தில் ஒட்டியிருக்கும் மாற்றத்தின் சக்திக்கு சான்றுகளாக அம்மன் வழிபாடு குறித்த தொ.ப.வின் உயர்வு நவிர்ச்சியும் அதற்கான விளக்கமும் திகழ்கின்றன. ஒரு பாலைவனத்தின் கண்ணை மறைக்கும் புழுதிப் படலத்தினூடே தெளிவான காட்சியைக் கொடுக்கும் ஒரு மந்திரத்தை சாத்தியமாக்குகிறது தொ.ப.வின் வரலாற்று சமூகவியல் விவரணை தொ.ப. ஒரு தேர்ந்த கோட்பாட்டாளர் என்பதால் சாமானிய புரிதலுக்கு பிடிபடாத சில கருதுகோள்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் சமய வரலாற்றையும் சமூகத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு அவை எரிச்சலை அல்லமால், ஆர்வத்தையே அதிகமாக்கும். எழுத்து மட்டுமே அறிவு என்று அறியப்படுகிற இன்றைய காலக்கட்டத்தில் எழுத்தறிவில்லாமலே ஒருவர் கணித அறிவால் பெயர் பெற்றிருக்க முடியும் என்ற எதார்த்தத்தை சுந்தர் காளியுடனான உரையாடலில் உணர்த்துகிறார் தொ.ப. எழுத்து மரபு, நகர்ப்புறம், பிரம்மாண்டம் இவையெல்லாம் அதிகாரத்தின் பல்வேறு வடிவங்கள்., அதிகாரமும் மதமும் நாணயத்தின் இரு பக்கங்கள்போல பிரிக்க முடியாதவை என்கிறார் அவர். முன்னும் பின்னும் மேலும் கீழும் அப்படியும் இப்படியும் என இவர்களின் விவாதத்தில் கூறபட்டும் வடிகட்டப்பட்டும் வருகிறது அறிவின் சாறு. கொதிநிலையை எட்டிய பிறகு எல்லா பெருங்கோவில்களும் பாழடையும் என்கிறார் அவர். தஞ்சை பெரிய கோவில் போன்ற பெரிய ஆலயங்கள் இந்து சமய அறநிலைத் துறை போன்ற கட்டமைப்பு இல்லாவிட்டால் தாக்குப் பிடிக்காது என்று சொல்கிறார். அதற்கு நேர்மாறாக, அம்மன் கோவில்களில் உயிர்களிடையே ஒத்திசைவு இருக்கிறது. அம்மன் கோவில்களை பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி எனக்கு கபாலீஸ்வரர் கோவிலையோ, பார்த்தசாரதி பெருமாள் கோவிலையோ பார்க்கும்போது ஏற்படுவதில்லை என்கிறார் தொ.ப. தாய்த் தெய்வ வழிபாட்டு நெறிகள், சமயங்கள் முன்னிறுத்துவது ஞான (அறிவு) நிலையல்ல. அவை பிரேமே (அன்பு) நெறிகளாகும் என்று சொல்லும் இடத்தில் அவர் அமைப்புரீதியான பெருமதங்களுக்கும் மக்களிடமிருந்து அன்னியப்பட்ட ஆணாதிக்க சார்பு கொண்ட மதங்களுக்கும் எதிராக ஒரு அழுத்தமான பதிவைச் செய்கிறார். -எஸ். செந்தில் குமார். நன்றி: இந்தியாடுடே, ஆகஸ்ட் 7, 2013.