கம்பனில் சங்க இலக்கியம்
கம்பனில் சங்க இலக்கியம், ம.பெ. சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 304, விலை 200ரூ.
கம்பரின் தொல்காப்பியப் புலமை கம்பராமாயணத்தில் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. அதேபோல் கம்பர், அகத்திணை, புறத்திணை இரண்டையும் போற்றிய விதத்தையும், சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களைத் தம் பாடலில், ஏற்றிப் போற்றியுள்ள பாங்கையும் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் அகநானூற்றுக்கு அகவற்பாவால் எழுதிய உரைப் பாயிரத்தில் சங்கப் புலவர்களைச் சான்றோர் என்று குறிப்பிடுவதை அடியொற்றி, கம்பர் கோதாவரி ஆற்றுக்கு உவமை கூறுமிடத்தில் சான்றோர் கவி என்கிறார் என்பதையும் பதிவு செய்து, சங்க இலக்கியத்தின் தாக்கம் கம்பர் பாடல்களில் விரவி இருப்பதையும் முதல் கட்டுரையான கம்பனில் சங்க இலக்கியம் விரித்துரைக்கிறது. கம்பரின் தண்டலை மயில்கள் ஆட என்ற பாடல் அகநானூற்றில் கபிலர் பாடிய (ஆடமைக்குயின்ற 62) பாடலை அடியொற்றி பிறந்ததுதான் இப்பாடல் எனும் செய்தி பலருக்கும் புதியது. மேலும், கதை போக்கில் அமைந்த குறுந்தொகைப் பாடல்(குறுந். 124) போல, நகர் நீங்கு படலத்தில் ராமன் சீதை பேசிக்கொள்வதை (1827) கம்பர் அமைத்துப் போற்றியுள்ளார். சங்க இலக்கியத்தில் அமைந்த அகத்திணைக் கூறுகளை கம்பனில் முல்லைத்திணை கட்டுரை எடுத்து விளக்குகிறது. கம்பனும் சாத்தனாரும், கம்பனும் வில்லியும், கம்பனில் குறிப்பறிதல், கம்பனில் பழமொழிகள் ஆகிய கட்டுரைகள் கம்பன் பல்துறை வித்தகர் ஆழங்காற்பட்டவர் என்பதை மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக தண்டலை மயில்கள் ஆட (பக். 45, 133), புவியினுக்கு அணியாய் (பக். 15, 95) ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் நூலில் இடம் பெறுவதைத் தவிர்த்திருக்கிலாம். நன்றி: தினமணி, 21/4/2014.
—-
கம்பன் காணும் திருமால், ஆ. கிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
கம்பராமாயணத்தை அடிப்படையாகக்கொண்டு, கம்பன் ராமனை எவ்வாறு திருமாலாகச் சித்தரிக்கிறார் என்பதை தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது. கம்பரைப் பொறுத்தவரையில் ராமனே திருமால். திருமாலே ராமன், அவருடைய படைப்பு பக்தியின் சிகரத்தை அடைகிறது. இதற்கான விளக்கங்களும் இந்த நூலில் பல கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலைப் படிப்பதன் மூலம் கம்பனின் ராமபக்தியின் பூரணமான பரிணாமத்தை வியந்து பார்க்க முடியும். 6 காண்டத்தில் இருந்து 375 பாடல்கள் நூலில் இடம் பெற்றிருப்பது மேலும் சிறப்பை தருகிறது. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.