கம்பனும் ஆழ்வார்களும்
கம்பனும் ஆழ்வார்களும், ம.பெ.சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1, பக்கம் 312, விலை 180 ரூ.
வைணவத் தமிழ் வளர்த்த முதலாமவர் ஆழ்வார்கள். கம்பன் அவர்க்குப் பின்னே அக்கடனைச் செய்தார். இருப்பினும், ஆழ்வார்களின் சொற்சுவையும் கம்பனின் கவிச்சுவையும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை இந்த நூல் அழகாகக் காட்டுகிறது. வைணவத் தமிழ்ச் சுவை சரளமாகப் பொங்கிப் பிரவாகமெடுத்து நூல் எங்கும் விரவிக் கிடக்கிறது. இதில், கம்பனும் ஆழ்வார்களும் ஒப்புமை காணப்பெறுகிறார்கள். அடுத்து பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகரர், திருமங்கை மன்னர், நம்மாழ்வார் என இவர்களின் பாசுரங்களோடு கம்பனின் கவித்திறம் ஒப்புநோக்கப்பட்டுள்ளது சிறப்பு. ‘இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே’ என்று நம்மாழ்வார் கூறுவதுபோல், கடவுள் வணக்கத்தில் கம்பன், ‘அலகிலா விளையாட்டு உடையான்’ என்கிறார். ராமனை நினைந்து, ‘மனத்துக்கினியான்’ என்று ஆண்டாள் கூறுதல்போல், கம்பனும் அவன் நாமம் பேசுகிறார். ‘சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்’ என்று ஆண்டாள் சொல்ல, கம்பனோ ‘கனக்கருமேகம் ஒன்று கார்முகம் தாங்கி ஆர்க்கும் மனக்கு இனிது ஆகி நிற்கும்’ என்கிறார். ‘கம்பனும் வைணவ உரையாசிரியர்களும்’, ‘காலம்தோறும் கம்பன்’ முதலிய கட்டுரைகள் மனதைத் தொடுகின்றன. இந்த நூலைப் படித்து முடிக்கையில் தமிழ்க் கவியமுதம் நெஞ்சில் நீங்காது இழையோடுகிறது. உவமை நயத்தையும், நல்ல தமிழையும் சுவாசிக்க விரும்புவோர்க்கு இது பிராண வாயு.
—
புத்திலக்கியங்களில் முற்போக்குச் சிந்தனைகள், மோ. பாட்டழகன் பதிப்பாசிரியர், வசந்தா பதிப்பகம், சென்னை – 88, பக்கம் 496, விலை 400 ரூ.
திருச்சி தூய வளனார் கல்லூரி தமிழ்த்துறை நடத்திய ஆய்வுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட 89 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மனித உரிமைகள், மக்கள் போராட்டங்கள், பெண்ணியச் சிந்தனைகள், சமூகப் பார்வை, தலித் வாழ்வியல், அடிமைநிலை மீட்பு என்று பல கோணங்களில் முற்போக்குச் சிந்தனைகளை வரையறுத்துக்கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பொன்னடியான், அப்துல்ரகுமான், வைரமுத்து, மு. மேத்தா, மீரா, இன்குலாப் முதலிய கவிஞர்களின் கவிதைகளில் காணப்படும் முற்போக்குக் கருத்துகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழின் குறிப்பிடத்தக்க பல நாவல்களில் காணக்கிடைக்கும் முற்போக்குக் கருத்துகளைச் சிறப்பித்துக் கூறும் ஆய்வுக்கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. தமிழில் வெளிவந்த சிறுகதைகள், நாடகங்கள் போன்றவையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. நாவல், சிறுகதை போன்றவற்றின் கதைப் போக்குகளை ஒவ்வொரு கட்டுரையும் விவரித்துச் சொல்வதால் ஆய்வுக்கட்டுரைகளைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படாமல், கதை படிப்பது போன்ற உணர்வே மேலோங்குகிறது.