கருமை செம்மை வெண்மையைக் கடந்து
கருமை செம்மை வெண்மையைக் கடந்து, வே.மு. பொதியவெற்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 280ரூ.
செறிவான ஆய்வு நூல்! மூத்த எழுத்தாளர் வே.மு.பொதியவெற்பனின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்ட்டு மிகவும் செறிவான ஒரு நூலாக இது இருக்கிறது. இலக்கியம், மெய்யியல், தெருக்கூத்து, கலைகள், சித்தர் மரபுகள், மணிமேகலை, இறையியல், தத்துவம் என்று பல்வேறு துறைகளில் ஆய்வுப்புலத்தில் இருப்பவர்களுக்குபேருதவி செய்யக்கூடிய கட்டுரைகள். ஒவ்வொரு தலைப்பிலும் இவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் கிட்டத்தட்ட 360 பாகைக் கோணத்தில் மையப்பொருளை ஆராய்கின்றன. ஒப்பியல் நோக்கில் சித்தர் மெய்யியல் என்ற கட்டுரையை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். திருமூலரில் தொடங்கி அப்பர், இஸ்லாம், சுகிசிவம், ந.முத்துமோகன் வழியாகப் புகுந்து சூபி மரபில் ஆராய்ந்து சென் தத்துவத்தின் சடோரியில் முடிக்கிறார். – அக்டோபர், 2015. நன்றி: அந்திமழை.
—-
செவ்வந்திகளை அன்பளிப்பவன், ஸ்ரீதர்பாரதி, எக்களாம், மதுரை, விலை 70ரூ.
ஊர் நினைவுகள்! கிராமத்து வாழ்வின் ஞாபகங்களை வரிகளில் வடிக்க முயற்சிக்கும் இளைஞரின் முதல்கவிதைத் தொகுப்பு இது. இழந்த நிலம், மரம், சாமி, வாழ்க்கை என்று ஒவ்வொரு கவிதையும் அழகான மொழியில் பேசுகிறது. கர்நாடக எல்லையில் கமண்டலத்தைக் கவிழ்த்த காகத்தை சபிக்கும் தமிழகத்துக் காகத்தைப் பேசும் நூற்றாண்டு தாகம் கவிதையும் மணல் அள்ளிப்போகும் லாரியைக் குரைக்கும் நாய் பற்றிய கலகக்குரல் கவிதையும் முதல் வாசிப்பிலேயே கவனத்தை ஈர்க்கின்றன. – அக்டோபர், 2015. நன்றி: அந்திமழை.