கர்ணன்
கர்ணன், எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 380, விலை ரூ.320.
எஸ். விஜயராஜ் ஓர் திரைப்பட இயக்குனர், கதாசிரியர், சிறந்த இலக்கிய விமர்சிகர். அர்ச்சுனன் தர்மயுத்தம் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி, பாரதப் போரில் கர்ணனைக் கொல்ல செய்தானா? என்ற கருத்தை, உள்ளடக்கி அருமையான விமர்சன நூலை எழுதியுள்ளார். சிட்டுக் குருவியின் தாவல்போல் சின்னச் சின்ன அழகு வாக்கியங்கள். மதுரமான நடை. புராண இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு.
—-
புதிய நோக்கில் புறநானூறு, பூவை அமுதன், அருள் பதிப்பகம், பக். 240, விலை 100ரூ.
புறநானூறு, பழந்தமிழ்ப் புலவர் பல நூறு பேர், பல்வேறுபட்ட பாடு பொருட்கள் பற்றிப் புனைந்துள்ள தொகுப்பு நூலாகும். ஊர், பேர் தெரியாத புலவர்களின் அருமை பெருமைகளைக் காலாகாலத்துக்கும் காட்டவல்ல, கவிமலர்கள் கொண்ட தொகுப்பே புறநானூறு. நூறு தலைமுறைகள், கடந்த நிலையிலும் பழந்தமிழ் நாட்டையும், அக்கால மக்கள் வாழ்க்கை, பண்பாட்டையும் நாடாளும் செல்வர், மன்னர், வீரர் முதலியோர் மாண்புகளையும், பல்வேறு நிலைகளால் குறித்துக் காட்டும் அரிய பாடல்களின் தரத்தையும் கொண்டது. உ.வே.சா. வின் பெருமுயற்சியில் வெளிவந்த பல நூல்களில், புறநானூறு எனும் புதையலும் ஒன்று. பல துறை நூல்களைப் படைத்தளித்து, நாட்டில் நன்கு அறிமுகமானவர் ஆசிரியர் பூவை அமுதன். வாழ்த்துக்கள் எனத் துவங்கி, சிறப்புக்குரிய சேதிகள் என்பது வரை முடிந்துள்ள கட்டுரைகள், பதினெட்டு அடங்கிய புத்தகமாகத் தந்துள்ளார். ஆய்ந்து தெளிந்து அனுபவப்பட்ட தேர்ச்சியும், முதிர்ச்சியும் கனிந்து கசிந்த கருத்தோட்டமாக காட்சி தருகிறது கட்டுரை ஒவ்வொன்றும். மாணவர்முதலாக ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரும் படித்தறியத் தக்க பாங்கில், படைக்கப்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் பயன்தருவனவாகும். -கா.முருகையன். நன்றி:தினமலர்,12/1/2014.