செள்ளு
செள்ளு,செல்வராஜ், பாரதி புத்தகாலயம்.(சிறந்த சிறுகதைத்தொகுப்பு).
தமிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத கடலோர மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்வை, அதன் அசலான மொழியில் முன்வைக்கிறார் செல்வராஜ். கன்னியாகுமரி மாவட்டக் கடலோரக் கிராமமான சைமன் காலனியில் பிறந்த இவர், பாரம்பரிய மீன்பிடிச் சமூகமான முக்குவர்களின் வாழ்வையும், அவர்களின் பாடுகளையும் மிகவும் நெருக்கமாக, உள்ளிருந்து பேசுகிறார். தமிழ் இலக்கியப் பரப்புக்குப் புத்தம் புதியதான இந்த மொழி, உள்ளே நுழையும்போது சற்றே மிரளவைக்கலாம். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி, 1990களில் வீச்சுடன் வெளிப்பட்ட தலித் இலக்கிய எழுத்துகளை உள்வாங்க, அப்போது வாசக மனம் திணறியதைப் போலவே, செள்ளுவை ஏற்றுக்கொள்ளுவதிலும் சிரமம் இருக்கலாம். ஆனால் அந்த மொழிதான் இந்த தொகுப்பின் சிறப்பே. இது தமிழ் இலக்கியத்தை, கடலை நோக்கி அழைக்கிறது.
—
குன்னிமுத்து, குமாரசெல்வா, காலச்சுவடு பதிப்பகம், (சிறந்த நாவல்).
தென்பகுதித் தமிழக மக்களின் அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருக்கும் மதம், நடைமுறையில் எப்படி செல்வாக்குச் செலுத்துகிறது என்பதையும், மதத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் அரசியல் ஆட்டங்களையும், விளவங்கோடு மக்களின் கலாசார வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் வட்டார வாசத்துடன் முன்வைக்கும் நாவல். குன்னிமுத்து என்பதை குண்டுமணி என்று சொல்வது உண்டு. பெண்மையின் தகுதி என்று சொல்லப்படும் அம்சத்தைப் பூர்த்திசெய்ய இயலாத அருளி என்கிற பெண்ணின் குறியீடாக இந்தச் சொல் கையாளப்பட்டுள்ளது. இருளியின் கதையாகத் தொடங்கும் நாவல், திராவிட, தேசிய, கம்யூனிஸக் கட்சிகளின் அரசியல் சதுரங்கத்தை சாதாரண மக்களின் குரல் வழியே பேசுகிறது. எளிய மக்களின் கலாசாரத்தை வெகு இயல்பாக முன்வைக்கும் படைப்பு. நன்றி: ஆனந்த விகடன், 8/1/2014.