குடும்ப விளக்கும் இருண்ட வீடும் ஒரு பார்வை
குடும்ப விளக்கும் இருண்ட வீடும் ஒரு பார்வை, முனைவர் சரளா ராசகோபாலன், அன்புப் பதிப்பகம், பக். 272,விலை 170ரூ.
பாவேந்தரின் புகழ்மிகு படைப்புகள், இரண்டின் ஆய்வுத் தொகுப்பாக அமைந்த அருமையான நூல் இது. வாழ்வியல் இலக்கியம், பெண்ணிலக்கியம், காதல் இலக்கியம், நான்கு தலைமுறை இலக்கியம் என்று பத்தொன்பது தலைப்புகளில், புரட்சிக் கவிஞரின் படைப்புகளில் காணப்படும் புதுமைச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு விவரிக்கிறார். பேராசிரியை சரளா ராசகோபாலன். ஆழ்ந்த புலமை, நுண்ணிய ஆய்வுடன் படைப்புகளின் கதைச் சுருக்கமும் கூறி, பாடல் வரிகளையும், ஒப்பீட்டுக்கான திருக்குறளையும் ஆங்காங்கு இடம்பெறச் செய்து, மூல நூல்களை முழுமையாக நாமே படித்த மகிழ்வை ஏற்படுத்தும் விதமாக ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். -பவானி மைந்தன்.
—-
மனிதனாகும் பொருளே, கே.வி.புருஷோத்தமன், செல்வி பதிப்பகம், 14, நான்காவது குறுக்குத் தெரு, வெங்கட்டா நகர், புதுச்சேரி 605011, பக். 134, விலை 100ரூ.
ஆசிரியர் தமக்குத் தெரிந்த அனுபவச் சுவடுகளைத் தொகுத்து, இடை இடையே சிறு சிறு கதைகளை ஆங்காங்கே பொருத்தி எழுதியுள்ள, 31 கட்டுரைகள் அடங்கிய புத்தகம். கல்லூரி மாணவர்கள், இந்த நூலைப் படித்தால் பெரிதும் பயன் அடைவர். எளிய தமிழ் நடை, அரிய அருமையான கருத்துக்கள். நூலாசிரியர் தாம் நினைத்ததை எழுத்தில் சிறப்பாக வடித்துள்ளார். -ஜனகன். நன்றி:தினமலர்,12/1/2014.