பூர்வீக பூமி
பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 164, விலை 80ரூ.
இந்த நூலில், 1991ல் கர்நாடகா, தமிழக எல்லைகளில் கன்னடியர்கள் ஆடிய வெறியாட்டத்தைத் தத்ரூபமாக சித்தரிக்கிறார் ஆசிரியர். வட்டார வழக்கும் உரையாடல்களோடு கூடிய இந்த நாவல் வெறுமனே பார்ப்பதற்கு மட்டுமல்ல. சீரிய சிந்தனைக்கும் உரியது. -சிவா.
—-
மனிதனையும் தெய்வமாக்கும் சன்மார்க்க பெருநெறிகள், தெ. ராமநாதன், ஆர். பானுமதி, எண். 1/2, காமராஜர் தெரு, பொன்மலைப்பட்டி, திருச்சி 620004, பக். 168, விலை 50ரூ.
திருவருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகள்பால், மிகுந்த ஈடுபாட்டுடன் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. சத்திய விண்ணப்பம் தொடங்கி, வருவார் அழைத்து வாழ் என்பது முடிய 26 அத்தியாயங்கள் நூலில் உள்ளன. அடிகளாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறிகளும் பிற ஞானியரோடு வள்ளலாரை ஒப்பிட்டு எழுதியவைகளும், மெய்ஞானத்தீ பரவட்டும் என்ற விழைவும் நூலில் காணப்படுகிறது. தேவாரம், திருவாசகம், சீரடி சாய்பாபா, ஸ்ரீரமணர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் அருளுரைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. திருவருட்பா பாடல்களும் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. ஜோதி சொரூபமான அறிவை எப்போதும் வணங்குவோம் என்ற நோக்கத்துடன் நூல் நிறைவு பெறுகிறது. ஆன்மிக நாட்டமுடையவர்களுக்குப் பயன் தரும் நூல். -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி:தினமலர்,12/1/2014.