கலீல் கிப்ரானின் காதல் கதை
கலீல் கிப்ரானின் காதல் கதை, ராஜ்ஜா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ.
நீங்கள் மாதந்தோறும், 300 ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்குகிறீர்கள். அந்த ரசீதை அரசிடம் கொடுத்தால், உங்களுக்குப் பணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றால் எப்படியிருக்கும்? ஹாலந்து நாட்டின் அரசு ஊழியர்களுக்கு, இப்படியொரு சலுகை வழங்கப்படுகிறது. தங்கள் நாட்டு மக்கள், படிப்பதில் ஆர்வம் குன்றாதிருக்க, புத்தக பதிப்பாளர்களுக்கு அவற்றை அச்சிட வேண்டிய காகிதத்தை, மிகக் குறைந்த விலைக்கு அளிக்கிறது. புத்தக விலையை ஏற்ற வேண்டிய அவசியமே அங்கு இல்லை. இப்படி உலகளாவிய ஏராளத் தகவல்களோடு, கம்பர், திருவள்ளுவர், பாரதி, தாகூர், தமித்தாத்தா, டி.எஸ்.எலியட், சார்லஸ் டிக்கன்ஸ், கலீல் கிப்ரான் என, உலகப் பெரும் இலக்கியவாதிகள் பலரின் வரலாற்றுச் சம்பவங்கள், அவர்களின் படைப்பிலக்கியச் சிறப்புகள் உள்ளிட்ட, 27 கட்டுரைகளின் சுவாரசியமான தொகுப்பு நூல் இது. ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி, உலகப் புகழ் பெற்று திகழும் புதுவை பேராசிரியர் ராஜ்ஜா, தன் வாசிப்பு மற்றும் இலக்கிய பயண அனுபவங்களின் பிழிவாக இந்த நூலை உருவாக்கியுள்ளார். -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 15/3/2015.
—-
வோர் பார் கன்சயின்ஸ் (ஆங்கிலம்), இ. தாமோதர்சுவாமி, ஸ்ரீநிதி பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 200ரூ.
கடந்த 1989 ஜனாதிபதி தேர்தலில், ‘மனசாட்சிபடி’ வாக்களியுங்கள் என்று கூறி கட்சியை பிளந்தது, ‘ஊழல் உலகளாவியது’ என்று கூறி, ஊழலை நியாயப்படுத்தியது என, இந்திய அரசியல் மற்றும் சமுதாய சூழலை நாசம் செய்தது காங்கிரஸ். ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கியவர் இந்திரா காந்தி. அவர், அவரது மகன், அவரது குடும்பத்தினரின் பினாமி ஆட்சி என, காங்கிரஸ் ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடியதை விலாவாரியாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். ‘முடவன் கூட, கனரக வாகன ஓட்டி உரிமை பெற்றுவிட முடியும்’(பக். 126) என்பதன் மூலம், ஊழல் வேரோடிப் போனதை மட்டுமின்றி, சமுதாயத்தை சீரழித்துள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளார். தமிழகத்தில் திராவிட கட்சிகள், மாறி மாறி ஆட்சி செய்து, தொட்டில் முதல் சுடுகாடு வரை ஊழல், நிரம்பி வழிவதையும் வாரிசு அரசியலின் அவலத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். குடும்ப அரசியல், நேரு துவங்கி எல்லா அரசியல் கட்சிகளிலும் இன்று வரை தகுதியற்ற முறையில் வளர்த்தெடுக்கப்படுகிறது. இதனால், காஷ்மீர் பிரச்னை முதல், இலங்கை பிரச்னை வரை எப்படி ஆவணத்தின் அடிப்படையில் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதையும் இந்த நூல் விளக்குகிறது. -திருநின்றவூர் ரவிகுமார். நன்றி: தினமலர், 15/3/2015.