கல்கி முத்திரைக் கதைகள்

கல்கி முத்திரைக் கதைகள் – பதிப்பாசிரியர் ம. திருமலை; பக்.208; ரூ. 100 செல்லாப்பா பதிப்பகம், மதுரை -1;

அமரர் கல்கியின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவருடைய சிறுகதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. அவற்றில் 12 சிறுக்கதைத் தொகுத்து ‘கல்கி முத்திரைக் கதைகள்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். பன்னிரண்டு சிறுகதைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் அமைந்துள்ளன. பிழைப்புக்கு வழி தேடி அலையும் கந்தசாமியின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் ‘போலீஸ் விருந்து’ சிறுகதை நகைச்சுவையோடு இன்றைய எதார்த்த நிலையை படம் பிடிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. அந்தக் கதைகயின் இறுதியில்,”உலகம் ரொம்ப சரியாத்தான் நடந்து வருகிறது. எல்லாம் அதோடு, அப்படியப்படி சேர வேண்டிய இடத்தில்தான் கணக்காய்ப் போய் சேர்கிறது” என்று கந்தசாமி கூறுவதாய் வரும் கல்கியின் வரிகள்,அடடா… இன்றைக்கும் எவ்வளவு பொருந்துகிறது!.’சின்னத்தம்பியும் திருடர்களும்’ என்ற சிறுகதையில் மதுவே அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்று விளக்கியுள்ளது, இன்றைய தமிழகத்திற்கு நிச்சயம் பொருந்தும். இவ்வாறு இக்காலத்துக்கும் பொருந்தும் பன்னிரண்டு சிறுகதைகளும் கல்கியின் குறிஞ்சி மலர்களாய் இப்புத்தகத்தில் மணம் வீசுகின்றன. நன்றி: தினமணி (11-3-2013).

நைடதம் – அதிவீரராமபாண்டியன்; உரையாசிரியர்: ஏ. எஸ். வழித்துணை ராமன்; பக்.472; ரூ. 220; பாரி புத்தக நிலையம், சென்னை – 108. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-813-3.html

‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்ற பழமொழியே இந்நூலின் சிறப்பை உணர்த்தும்.’தமிழ் வளர்த்த தென்னவன்’, ‘குணசேகரவழுதி’ , ’பிள்ளைப் பாண்டியன்’, ’வல்லபதேவன்’, ’குலசேகரன்’ எனப் பலப் பெயர்களால் அழைக்கப்பட்ட, கொற்கையை ஆண்ட பாண்டிய வம்சத்தவனான அதிவீரராமபாண்டியன் தமிழிலும் வடமொழியில் மிகச்சிறந்த தேர்ச்சி பெற்றவர். வடமொழியில் உருவான ‘நைடதம்’ என்ற மூல நூலின் வழி நூலாக தமிழில் இதை அவர் இயற்றியுள்ளார். நிடத நாட்டை அரசாண்ட மன்னன் நிடதனின்(நளன்) சரித்திரதைக் கூறுவதால் இந்நூலுக்கு ‘நைடதம்’ என்ற பெயர் வந்தது. நளன் – தமயந்தியின் காட்சி இன்பம், காதல் இன்பம், இலக்கிய இன்பம், கலியின் துன்பம், கலி நீகிய பின் கிடைத்த இன்பம் போன்றவையும், நவக்கிரக நாயர்களுள் ஒருவரான சனி (சனீஸ்வரன்) யின் பார்வையிருந்து யாரும் தப்ப முடியாது என்பதையும், சனி போல் கெடுப்பவனும் இல்லை கொடுப்பவனும் இல்லை’ என்சிற பழமொழிக்கு ஏற்ப சனி(கலி) விலகிய பின் நளன் பெறும் இன்பங்களும் அறியத்தக்ககவை. நளன் சரித்திரம் மகாபாரதத்தோடு தொடர்புடையது. கலி சந்தோஷத்தால் பிடிக்கப்பட்ட நளன், பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ளும்போது தனது உருவத்தை மாற்றிக்கொண்டு சமையல்காரனாக இருந்து உதவுகிறான். கலி தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் நளன் சரித்திரத்தைப் படித்தால் அத்தோஷம் நீங்கப்பெறுவர் என்பது மக்களிடையே உள்ள நம்பிக்கை. சொற்சுவை, பொருட்சுவை, இலக்கியச்சுவை, இயற்கை வர்ணனைகள் ததும்பப் பாடப்பட்ட பாடல்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன். இன்பச் சுவையை நுகர நினைப்பவர்கள் படிக்கவேண்டிய நூல். நன்றி: தினமணி (11-3-2013).

வரலாற்று வண்ணங்கள் – சு.குப்புசாமி; பக். 280; ரூ. 120; திருமுடி பதிப்பகம், 40 கிழக்குச் சன்னதித் தெரு, வில்லியனூர், புதுச்சேரி – 605110.

ஆலயங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட வரலாற்று தொடர்புடைய இடங்களில் உள்ள கல்வெட்டுக்ளின் தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. 26 கட்டுரைகளில் கல்வெட்டுச் செய்திகள், முன்னோர் வரலாறு, ஊர்களின் பெருமை, மன்னர்களின் மாட்சி உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தகுந்த சான்றுகளுடன் கூறியுள்ளார். தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் கல்வெட்டு அறிக்கைகள், கல்வெட்டுகளின் எண்கள், அவற்றில் கூறப்படும் பாடல்கள், அவற்றுக்கான வாரலாற்றுப் பின்னணிக் கடைகள், விளக்கங்கள், புதுவைமாநில மட்டுமல்லாமல், தென்னார்க்காடு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக ஊர்ப் பெயர்கள், அவற்றின் தற்போதைய திருபுகள் என வரலாற்றுச் செய்திகளை பிரமிப்பூட்டும் விதத்தில் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். பெரியபுராண்மும் கல்வெட்டுகளும் என்ற கட்டுரையில் பாடல்களை ஒட்டிய தலங்களின் விளக்கங்கள் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன. நம் முன்னோர் வாழ்வை அறிந்துகொள்ளவிழையும் அன்பர்களுக்கு அருமையான தொகுப்பு இந்த நூல். நன்றி: தினமணி (11-3-2013).

Leave a Reply

Your email address will not be published.