காரியக் காமராசர் காரணப் பெரியார்

காரியக் காமராசர் காரணப் பெரியார், மே.கா. கிட்டு, தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 125ரூ.

காமராசர், பெரியார் என்னும் இரு பெரும் தலைவர்கள் ஒரே இயக்கத்தில் வளர்ந்து வெவ்வேறு திசையில் அரசியலில் பயணித்தாலும், ஒருவர் மீது மற்றவர் கொண்ட மரியாதை அரசியல் நாகரிகத்தை இந்த நூல் பறை சாற்றுகிறது. காங்கிரஸ் கட்சியை வெறுத்துக் கொண்டே, காமராசர் என்ற அந்த பெருந்தலைவரை, அவரது ஆட்சியை பெரியார் ஆதரித்து வந்திருக்கிறார் என்பது வியப்பு அளிக்கிறது. மக்கள் தொண்டாற்றிய அந்த மகத்தான தலைவரைப் பற்றிய தந்தை பெரியாரின் பேச்சும், எழுத்தும் இந்த புத்தகத்தை அலங்கரித்திருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 22/5/13  

—-

 

கருங்கல்லில் மலர்ந்த மல்லிகைகள், முவப்பிகா பப்ளிஷர்ஸ், ஏ1, 118, 8வது மெயின் ரோடு, சாந்தி காலனி, அண்ணாநகர், சென்னை 40, விலை 55ரூ.

பல்வேறு காலகட்டங்களில் பல பத்திரிகைகளில் உடன்குடி எம். முகம்மது யூசுப் எழுதி வெளியான 83 கட்டுரைகளின் தொகுப்பு. அன்பிற்கினிய வாழ்விற்கு, இறைவனிடம் கையேந்துங்கள், சிதைந்து போன கூட்டுக்குடும்பம் போன்ற தலைப்புகளில் இஸ்லாம் போதிக்கும் நற்குணங்கள், நபிகளார் வாழ்ந்து காட்டிய வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/5/13  

—-

 

சாண்டில்யக் கதைகள் ஒரு ஆய்வு, தெ. இலக்குவன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ.

புத்தகத்தின் பெயர் சாண்டில்யன் எழுதுகிறேன் என்று இருந்தாலும் இதில் சாண்டில்யன் எழுதியிருப்பது சில பக்கங்கள்தான். சாண்டில்யனின் எல்லாக்கதைகளையும் ஆராய்ந்து, சிறப்பாக மதிப்பீடு செய்திருப்பது தெ. இலக்குவன். பாஷ்யம் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன், நான் பத்திரிகையாளனாகவோ, எழுத்தாளனாகவோ வர சொப்பனம்கூட கண்டதில்லை என்று கூறுகிறார். கல்கியும், சாமிநாத சர்மாவும் கொடுத்த ஊக்கத்தினாலேயே அவர் எழுத்தாளரானார். சரித்திரக் கதைகள் நிறைய எழுதி புகழ்பெற்றவர் சாண்டில்யன். அவருடைய ஒவ்வொரு கதையையும் நடுநிலையுடன் விரிவாக ஆய்வு செய்து கதைச் சுருக்கத்தையும் கொடுத்துள்ளார் இலக்குவன். சாண்டில்யனின் சரித்திரக் கதைகளில் சிறந்தது கன்னிமாடம். சமூக நாவல்களில் சிறந்தது நங்கூரம் என்பது அவருடைய தீர்ப்பு. நன்றி: தினத்தந்தி, 22/5/13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *