ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும், இனியன் சம்பத் பதிப்பகம், 3/643, குப்பம் சாலை, காவேரி நகர், கொட்டிவாக்கம், சென்னை 41, விலை 650ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-0.html
இந்நூலின் நாயகர், ஈ.வெ.ரா. பெரியாரின் அண்ணன் மகன். இவர் பெரியார் உருவாக்கிய திராவிட கழகத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், பெரியாருக்குப் பிறகு இயக்கத்தை தலைமையேற்று நடத்தக்கூடியவராகவும் திகழ்ந்தவர். ஒரு கட்டத்தில் பெரியாரின் சில அரசியல் முடிவுகளில் முரண்பட்டு, அண்ணாதுரையுடன் இணைந்து தி.க.விலிருந்து வெளியேறி தி.மு.க.வின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர். தி.மு.க.விலும் அண்ணாதுரைக்கு அடுத்த நிலையில் இருந்தவர். ஆற்றொழுகப் பேசும் தனது இனிய பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்த இவருக்கு, அரசியல் வியூகங்களை வகுக்கும் ஆற்றல் இல்லாததால், அரசியலில் பிரகாசமான நிலையை அடையத் தவறியவர். கொள்கைப் பிடிப்பான இவரது பாராளுமன்றப் பேச்சும், நாகரிகமான மேடைப் பேச்சும் நல்ல அரசியலுக்கு இன்றும் எடுத்துக்காட்டாக கூறப்படுபவை. இந்நூலில் ஈ.கெ.வி. சமபத்தின் வாழ்க்கை வரலாற்றுடன் திராவிட இயக்கங்களில் அவருக்குள்ள உடன்பாடு, முரண்பாடு போன்ற அனுபவங்கள் (அரிய புகைப்படங்களுடன்) சுமார் 600 பக்கங்களுக்கு மேல் தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் நான்கரை மணி நேரம் ஓடும் சம்பத்தின் சொற்பொழிவு குறுந்தகடு ஒன்றும், 232 பக்கங்கள் கொண்ட சம்பத் தொகுப்பு நூல்கள் ஒன்றும் இலவசமாகத் தரப்படுகின்றன. தமிழகம் மற்றும் இந்திய அரசியலைக் குறித்த விவரங்களும், வாதங்கள் எதிர்வாதங்களைக் கிளப்பக் கூடிய கருத்துக்களும் இந்நூலில் மண்டிக் கிடக்கின்றன. -பரக்கத். நன்றி: துக்ளக், 3/4/13.
—-
எம்.எஃப். உசேன் இந்திய சமகால ஓவியக் கலையின் முன்னோடி, ஓவியர் புகழேந்தி, தூரிகை வெளியீடு, எஸ்பி 63, 3வது தெரு, முதல் செக்டார், கலைஞர் நகர், சென்னை 78, விலை 175ரூ.
என்.எஃப். உசேன் என்ற மகத்தான ஓவியரின் கலை சார்ந்த மகத்துவங்கள், அவரைச் சுற்றி நிகழ்ந்த அரசியல் வெறுப்பின் இருட்டினால் மறைக்கப்பட்டுவிட்டது. இந்தியக்கடவுள்களையும் இந்திய மாதாவையும் ஆபாசமாக வரைந்தார் என்றும், நாட்டை விட்டு துரத்தப்பட்டு எங்கோ அகதியாக மடிந்தார் என்பதும்தான் அவரைப்பற்றி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பொதுக் கருத்து. அவர்மேல் நிகழ்த்தப்பட்ட வெற்றி, இந்தியாவின் கலைசார்ந்த மனசாட்சியின் மீது மதவாதம் அடைந்த ஒரு வெற்றி எனலாம். இந்த அரசியல் பிம்பத்தைத் தாண்டி உசேனின் வாழ்வையும் கலையையும் மிக ஆழமாக நெருங்கிச் சென்று தொடுகிறது இந்த நூல். இந்தியாவின் நவீன ஓவியக் கலைக்கு உசேன் ஆற்றிய மகத்தான பங்கினை கோட்பாட்டு ரீதியாகவும் அழகியல் ரீதியாகவும் நிறுவுகிறார் புகழேந்தி. நன்றி: குங்குமம், 1/4/13.
—-
திருக்குறள், தீபா நூலகம், 55, சத்ய கிருஷ்ணா நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 3, விலை 150ரூ.
எளிய நடையில் பாட்டு வடிவில் எல்லோருக்கும் புரியும் வகையில் திருக்குறளுக்கு விளக்கம் கொடுத்து உள்ளார் நூல் ஆசிரியர் க. வீரையன். நன்றி: தினத்தந்தி, 27/3/13.