காவல் புலன் விசாரணை

காவல் புலன் விசாரணை (இரண்டு புத்தகங்கள்), வீ. சித்தண்ணன், ஜெய்வின் பதிப்பகம், 4/391ஏ, இராம் தோட்டம், அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை 41, விலை தலா 500ரூ.

இந்நூலாசிரியர் காவல்துறை உயர் அதிகாரியாக சுமார் 35 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞராகவும் உள்ளார். தனது நீண்ட கால அனுபவத்தைக் கொண்டு காவல்துறைக்கு மிகவும் பயன் தரத்தக்க Police investigation Powers. Tactics and Techniques என்று இவர் ஆங்கிலத்தில் எழுதிய இரண்டு புத்தகங்கள், தற்போது காவல் புலன் விசாரணை என்ற ஒரே தலைப்பில் இரண்டு பாகங்களாக தமிழில் வெளியாகி உள்ளன. கடைநிலைக் காவலரும்கூட நன்கு புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் உருவாகியுள்ள இந்நூலில் காவல்துறை என்றால் என்ன, அதன் பிரிவுகள், பணிகள், அதிகாரங்கள், அணுகுமுறைகள், புலன் விசாரணைகள், அதற்கான நுணுக்கங்கள் என்று பல விஷயங்களை ஆசிரியர் பிரிவு, பிரிவாக விளக்கியுள்ளார். குறிப்பாக புலன் விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் விவரித்துள்ளார். அதாவது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதிலிருந்து, பாதிக்கப்பட்டவருக்குச் சாதகமாக வழக்கை வெற்றிகரமாக முடிக்கும் வரையிலும் அனைத்து நடவடிக்கைகளையும் எப்படி பின்பற்ற வேண்டும் என்பதை தனித்தனியாக அட்டவணையிட்டு விளக்கியுள்ளார். தலா 500 பக்கங்களுக்கு மேலுள்ள இரண்டு பாகங்களிலும் 25 அத்தியாயங்களில் காவல்துறை குறித்த அனைத்து தகவல்களும் கூறப்பட்டுள்ளன. இவை பல்வேறு சட்டங்களையும், நீதிமன்ற ஆணைகளையும், அரசு ஆவணங்களையும், இந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நூல்களையும் ஆய்வு செய்து எழுதப்பட்டள்ளதால், காவல்துறைக்கு மிகப் பயன்தரத்தக்க நூலாக இது விளங்கும். -பரக்கத். நன்றி: துக்ளக், 17/7/2013.  

—-

 

மாணவர்களுக்கான மேடை நாடகங்கள், எஸ். வஜ்ரவேலு, மகா பதிப்பகம், கவுரிவாக்கம், சென்னை 73, விலை 50ரூ.

வானொலியில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள், மாணவர்களுக்கு புரியும்வகையில் அமைந்துள்ளன. பள்ளியில் மாணவர்கள் மேடை நாடகம் போடுவதற்கு இந்நூல் மிகவும் உதவும். தேசபக்தியையும், நல்லொழுக்கத்தையும் கற்பிக்கும் சம்பவங்கள், நாடகங்களாக அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 10/7/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *