கி.பி. 1800ல் கொங்குநாடு
கி.பி. 1800ல் கொங்குநாடு, புலவர் செ. இராசு அடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக். 344, விலை 190ரூ.
திப்பு சுல்தான் ஆங்கிலேயருடன் போரிட்டுக் களப்பலியான பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிடைத்த மைசூர் மற்றும் கொங்குநாட்டுப் பகுதிகள் பற்றி, ஒரு களஆய்வு செய்ய எண்ணினார் அன்றைய ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மார்க்விஸ் வெல்லெஸ்லி பிரபு. இப்பொறுப்பு டாக்டர் பிரான்சிஸ் புக்கானன் என்பவரிடம் அளிக்கப்பட்டது. டாக்டர் புக்கானன் அதை ஏற்று, வழிகாட்டி, காவலர்கள், மொழி பெயர்ப்பாளர், படம் வரைபவர் ஆகிய குழுவினருடன் மதராசில் இருந்து புறப்பட்டுச் சென்று, விரிவான பயணம் நிகழ்த்தி, பல தரப்பட்ட மக்களையும், சந்தித்து உரையாடித் தொகுத்த விஷயங்கள் மதராசிலிருந்து புறப்பட்டு மைசூர், கனரா மற்றும் மலபார் நாடுகளிடையே மேற்கொண்ட சுற்றுப்பயணம், என்கிற தலைப்பில் ஆங்கில நூலாக வெளியிடப்பட்டது. இதில் புதைந்து கிடக்கும் தமிழக வரலாறு, இரு நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கொங்கு நாட்டு மக்களின் வாழ்வியல், பண்பாடு, விவசாயம், நெசவுத் தொழில் விவரங்கள் என, பல்வேறு செய்திகளும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. அவற்றை வேறு பல நூல்களின் ஆய்வுகளாடு ஒப்பிட்டுத் தொகுத்துள்ளனர், இருபெரும் வரலாற்று அறிஞர்கள். தமிழக வரலாற்று ஆய்வுக்கு மிக உதவிகரமாக அமைந்துள்ள ஒரு புதிய வரவு எனலாம். -கவுதமநீலாம்பரன். நன்றி: தினமலர், 15/5/2014.
—-
பெருநெறி பிடித்து ஒழுக மெய்ஞ்ஞான ஆய்வு நூல், அருட்பா அருணாசலம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆன்ம வழிபாட்டுச் சபை வெளியீடு, பக். 156, விலை 125ரூ.
நூலாசிரியர் 35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி, 25 ஆண்டுகளாக வடலூர் வள்ளற் பெருமான் சிந்தனைகளை எழுத்துகள் வாயிலாகவும், தமிழ் பொழிவுகள் வழியாகவும் மகத்தான சமரச சுத்த சன்மார்க்கத் திருப்பணியை செய்து வருகின்ற பெருமகனார், உத்தமர் தம் உறவு, உள் ஒன்று வைத்து, பெருமை பெறு நினது புகழ் ஆகிய 3 நூல்களைத் தமிழுக்குத் தந்தவர். சிந்தனை செய் மனமே எனத் துவங்கி, அடைக்கலம் என்ற தலைப்பிட்ட 16 தலைப்போடு நூல் நிறைவடைகிறது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேத உபாசணைகள் மூலம் கைவரப் பெறுகின்ற பலன்களை, ஓங்கார உபாசனையால் கைவரப் பெற்ற மகான் வள்ளல் பெருமான் என, நூலாசிரியரது ஆய்வுக் கண்ணோட்டம் (பக். 18) தக்க மேற்கோள்களோடு பதிவு செய்திருப்பது நூலாசிரியர் புலமைக்குச் சான்றாகத் திகழ்கிறது. நான் ஆணான் தான் ஆணான் நானும் தானும் ஆணான் என்ற வடலூர் வாக்கிற்கு நூலாசிரியர் விளக்கம் (பக். 100) சிறப்பாயிருக்கிறது. குறிப்பாக அருட்பெருஞ்ஜோதி அடியவர் பற்றிய ஒரு ஞானப் பேழை இந்நூல். -குமரய்யா. நன்றி: தினமலர், 15/5/2014.