குமுதம் சக்ஸஸ்
குமுதம் சக்ஸஸ், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 128, விலை 25ரூ.
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. அடுத்து என்ன கோர்ஸ் படிப்பது? எந்த கல்லூரியில் சேர்வது? என்ற குழப்பம் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும். கூடவே, நமக்கெல்லாம் அண்ணா பல்கலையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. அப்படியே கிடைத்தாலும் வங்கிகளில் கல்விக் கடன் கிடைக்குமா? இப்படிப் பல்வேறு கேள்விகள் உங்களுக்கு எழலாம். அவற்றிற்கெல்லாம் அந்தந்த துறை வல்லுநர்களைக் கொண்டே எளிமையாக பதில்களைக் கொடுத்திருப்பதுதான் குமுதம் சக்ஸஸ் நூலின் சிறப்பு. பெண்களாக இருந்தால் பாதுகாப்பான கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி? தமிழ்நாட்டில் விவசாயம் படித்தால் ஜெர்மனியில் வேலை கிடைக்கும் என்ற உண்மையை விவசாயப் பல்கலைக்கழக துணை வேந்தரைக் கொண்டே சொல்லும் நூல். எந்தப் படிப்பு படித்தால் என்ன வேலைக்குப் போகலாம் என்று ரமேஷ் பிரபா போன்றோர் புள்ளி விவரமே தந்துள்ளார்கள். ஒருவேளை மார்க் குறைவாக எடுத்திருந்தால்? அதற்கும் இந்நூலில் விளக்கம் உண்டு. மேலும் வெளிநாடுகளுக்குப் படிக்கப் போவோர் இந்நூலைப் படித்தாலே ஒரு தெளிவு கிட்டும். அந்தளவிற்கு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இது ஒரு சாதாரண நூலல்ல. மாணவர்களுக்கான ஒரு கலங்கரை விளக்கம். நன்றி: குமுதம், 3/7/2013.
—-
திமிங்கல வேட்டை, ஹெர்மன் மெல்வில், தமிழில்-மோகனரூபன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 204, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-129-1.html
1851ல் வெளியான மோபி டிக் என்ற நாவலின் தமிழாக்கம் இது. திமிங்கிலங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காதவை. அமைதியாகத் திரியும் அவற்றின் மீது மனிதன் போரைத் திணிக்கிறான். அதன் விலை உயர்ந்த கொழுப்பு எண்ணெய்க்காக அவற்றை வேட்டையாடுகிறான். இயற்கைக்கு எதிராக மனிதனின் இந்த வேட்டைதான் மோபி டிக் நாவல். தமிழில் அதன் சுருக்கத்தை முதன் முதலாக தந்துள்ளார் மோகனரூபன். சுருக்கம் என்றாலும் ஒரு முழு நாவல் படித்த உணர்வு எழுகிறது. நன்றி: குமுதம், 3/7/2013
—-
மாவீரன் அலெக்சாண்டர், குன்றில் குமார், செந்தமிழ்ப் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 130ரூ.
உலகின் பல பகுதிகளை வென்ற மாவீரன் அலெக்சாண்டரின் வீரவரலாறு விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. 33 வயதிலேயே காய்ச்சலால் காலமான இந்த மாவீரன் தான் இறக்கும்போது சவப்பெட்டியில் என் உடல் வைக்கப்படும்போது என் கரங்கள் இரண்டும் வெளியே தெரியும்படி இருக்க வேண்டும். வெறுங்கையோடு வந்த நான் வெறுங்கையோடு போகிறேன் என்ற தத்துவத்தை கூறிச்சென்றான். நன்றி: தினத்தந்தி, 26/6/2013