குற்றாலக் குறிஞ்சி
குற்றாலக் குறிஞ்சி, டாக்டர் கோவி மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 356, விலை 275ரூ.
சாகித்ய அகாடமி விருது பெற்ற, வரலாற்று இசை ஞானப் புதினம் இது. கதையின் நாயகி, குறிஞ்சி பிறப்பால் புலைச்சியாயினும், பிறவி இசை மேதை. மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடும் உறுதி. சமஸ்தானங்கள், ஜமீன்தாரர்கள், கலெக்டர்கள், வெள்ளைக்கார துரைகள் முதலியோர் ரசிப்பதற்காக அவர்களுக்காக பாடமாட்டேன் என்ற வைராக்கியம், நம்மை பிரமிக்க வைக்கும். கலைகளை வளர்த்த தஞ்சை சரபோஜி மன்னரே, அவளைக் காதலிக்கிறார். பின் தன் மகன் சிவாஜியும் அவளை காதலிப்பது அறிந்து, ஒதுங்கிக்கொள்ள அதிக சூடுபிடிக்கிறது கதையின் போக்கு. நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும், ஒரு ராகத்தின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இசை நுணுக்கம் தெரிந்த, ரசிக பெருமக்கள் இன்னும் கூடுதலாக இந்நூலை ரசிக்கலாம். -சிவா.
—-
குலாலர் புராணம், ர. அருள்நிதி, கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி நிழற்சாலை, திருமலை நகர் இணைப்பு, பெருங்குடி, சென்னை 600096, பக். 204, விலை 150ரூ.
உலகில் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு நெருப்பும், சக்கரமும்தான். சக்கரத்தின் துணைகொண்டு களி மண்ணில் மண்பாண்டங்களை உருவாக்கி உலக மக்களுக்கு அளித்த இனத்தை, குலாலர்கள் என்று சொல்வர். இந்தக் குலமே, மக்கள் குலத்தின் தொன்மையான குலம். இவர்களை பற்றிய பூர்வ உத்திரக் கதைகளின் தொகுப்பே இது. நம்மைச் செய்கின்ற குயவனர் கடவுள். அந்தப் பெரிய குயவனின் பிள்ளைகள் ஆகிய நாம் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து, பிறவிப் பெரும் பயன் அடைய வழி காட்டும் பக்தி இலக்கியம் இது. சமய இலக்கியப்பொக்கிஷம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 23/2/2014.