கொங்கு நாட்டில் உடலில் வரைதல் கலை குறிப்பாக பச்சை குத்துதல்
கொங்கு நாட்டில் உடலில் வரைதல் கலை குறிப்பாக பச்சை குத்துதல், டாக்டர் கா. மீனாட்சி சுந்தரம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர்.
உடலில் பச்சை குத்துதல், உலகெங்கும் காணப்படும் மிக பழமையான கலை. இது நாட்டுப்புற மக்களிடம் இன்றும் செல்வாக்கு பெற்றுள்ளது. தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புற பாடல்களில் காணப்படாத இந்த கலை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் கவிதைகளில் காணப்படுகிறது. அயல் நாட்டு விளையாட்டு வீரர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்தக் கலை, இப்போது இந்திய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியிலும் சர்வசாதாரணமாகிவிட்டது. கொங்கு நாட்டில் இளம்பெண்களுக்கு பச்சை குத்துதல் முக்கிய சடங்காக கடைபிடிக்கப்படுகிறது. மேலும், உறுப்பு சிதைத்தல், வடுப்படுத்துதல், முத்திரை இடல், காது குத்துதல் உள்ளிட்ட கலைகளும் எப்படி பின்பற்றப்படுகின்றன என்பது குறித்து சுவையான தகவல்கள் படத்துடன் 112 பக்க புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது செங்குன்றம் மாவட்ட கிளை நூலகத்தில் படிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 13/7/2014.
—-
டிரிங் டிரிங் டிரிங், ஸ்ரீ ரமா, திருமகள் நிலையம், சென்னை, விலை 90ரூ.
ஸ்ரீ ரமா எழுதிய குடும்ப நாவல். டீன் ஏஜ் பெண்கள் வளர்ப்பில் தாய்மார்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்தக் கதையின் நாயகி சுகுணா, அவருடைய கணவன் சுந்தரேசன். இவர்களுக்கு சுவீதா, சுகிர்தன் என இரு குழந்தைகள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த குடும்ப வாழ்க்கை சுகுணாவின் தோழி பிரதீமா வரவால் தடம் புரள்கிறது. பிரதீமா மீது சுந்தரேசன் சபலம், தோழிகளின் சகவாசத்தால் சுவீதாவின் சலனம், சுகிர்தனை பிரதீமா கடத்திச் செல்வது என விறுவிறுப்பாக நகர்கிறது. இறுதியில் சுபமாய் முடிகிறது. காய்கறி நறுக்கவும் கத்தி பயன்படுகிறது. கழுத்தை வெட்டவும் பயன்படுகிறது. அதை போலவே செல்போன் என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார். இந்த புத்தகத்தில் எழுத்து பிழைகள் நிறைய. அதைத் தவிர்த்திருக்கலாம் நன்றி: தினத்தந்தி, 9/7/2014.