சக்கர வியூகம்
சக்கர வியூகம் (சிறுகதைகள்), ஐயப்பன் கிருஷ்ணன், அகநாழிகை பதிப்பகம், பக். 96, விலை 80ரூ.
இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணம் மகாபாரதம் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. இதிகாசக் கதையை மீட்டுருவாக்கம் செய்கையில் பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்பாந்தம், சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம், சறுக்கிவிடாமல் கத்தி மேல் நடப்பது போன்றதான இந்தச் சவாலை எந்தச் சாமர்த்தியங்களும் தேவைப்படாமல் மிக இயல்பாகத் தன் நேர்மையான எழுத்தினால் கடந்திருக்கிறார் ஐயப்பன் கிருஷ்ணன். இளம் பாண்டவர்களைத் தவறுதலாகக் கொன்றுவிட்ட அஸ்வத்தாமனிடம் ‘குரு வம்சத்தைக் காக்கக் கடைசியாக இருந்த சிறார்களையும் அழித்து விட்டாயே’ எனக் கதறியபடியே துரியோதனன் உயிரை விடுவது ஒரு உதாரணம். தலைப்புக் கதையான சக்கர வியூகத்தில் ஒரு வரிவரும். ‘அனைத்தையும் பார்த்துக்கொண்டு காலம் தன் வட்டத்திகிரியை மேலும் சுழற்றிக்கொண்டே இருக்கிறது’ என்று. அட! எத்தகைய மெய்யான வார்த்தைகள். இந்நூலில் மொத்தம் ஏழு கதைகள். தான் வாசித்த வியந்த இதிகாசங்களை, தான் வியந்து மதித்த கதாபாத்திரங்களை தன் எழுத்தின் மூலமாக வாசகருக்கக் கொண்டுசேர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் அதையும் தாண்டி இவற்றை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இந்த மாபெரும் காவியங்களை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட வேண்டுமென விரும்புகிறார். அவரின் இந்த இதிகாசக் கடமை நிச்சயம் நிறைவேறும். -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 29/3/2015.