சங்கீத சற்குரு தியாகராஜர்
சங்கீத சற்குரு தியாகராஜர், ஜெ. அரவிந்த்குமார், லதா பதிப்பகம், ஜி3, பத்மா காம்ப்ளெக்ஸ், 2, கன்னியப்பன் தெரு, வடபழனி, சென்னை. பக். 344, விலை 200ரூ.
கர்நாடக சங்கீத உலகின் மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ தியாகராஜரின் வாழ்க்கைச் சரித்திரச் சுருக்கம், அவர் இயற்றிய நௌகா சரித்திரம், பிரகலாத பக்தி விஜயம், இவற்றோடு தியாகராஜரின் கீர்த்தனைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் மற்றும் அவற்றுக்கான தமிழ்மொழிபெயர்ப்பு, தியாகராஜர் கையாண்ட ராகங்கள், தாளங்களின் பட்டியல் போன்ற தியாகராஜர் பற்றி அனைத்தும் அடங்கிய அருமையான நூல். பொருள் பொதிந்த வார்த்தைகள், சொற்சிக்கனம், அசலான பக்தி, சாகித்தியத்துக்கேற்ற ராக அமைப்பு – இவை தியாகராஜர் கீர்த்தனைகள். உதாரணமாக மனதை அடக்குவதற்குச் சக்தியில்லாமல் போனால் இனிய மணியோசையாலும் நறுமண மலர்களாலும் செய்யப்படும் பூஜையினால் எந்தப் பயனும் இல்லை என்று கூறும் மனஸூ நில்ப சக்தி லேக போதே மதுர கண்ட விருல பூஜேமி ஜேயுனு (ஆபோகி) போன்ற கீர்த்தனைகள். தியாகராஜர் பக்தி யாத்திரையாக பல தலங்களுக்கும் சென்றது, அந்தந்த தலங்களிலுள்ள இறைவன் மீது கீர்த்தனைகள் பாடியது, அந்த ஊர்களிலிருந்து சங்கீதக்காரர்களையும் மகான்களையும் சந்தித்தது, சிவ பக்தையாயிருந்த மனைவியால் இவருக்கும் சிவன் மீது நாட்டம் ஏற்பட சிவன் மீது பல கீர்த்தனைகளைப் பாடியது போன்ற பல சுவையான விஷயங்கள் இந்த வாழ்க்கைச் சரித்திரத்தில் உள்ளன. தமிழ் மட்டுமே அறிந்தவர்களும் படித்து அனுபவிக்குமாறு கீர்த்தனைக்கு எதிர் பக்கத்திலேயே தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தியாகராஜரையும் சங்கீதத்தையும் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, தெரியாதவர்களும் படித்து ரசிக்கலாம். நன்றி: தினமணி, 30/12/2013.
—-
இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இசுலாமிய மன்னர்கள், ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 128, விலை 75ரூ.
இந்தியாவின் கஜினி முகமதுவின் படையெடுப்புக்குப் பின்தான் முஸ்லிம் ஆட்சி நிறுவப்பெற்றது என்பர். வட இந்தியாவை ஆண்ட முஸ்லிம் வம்சங்கள் பலவகையான போதிலும், முகமது கோரி நிறுவிய டில்லி சுல்தானிய மன்னர்கள் ஒரு பிரிவினராகவும், பாபர் நிறுவிய முகலாய ஆட்சியாளரை மற்றொரு பிரிவினராகவும் பிரிக்கலாம். இந்நூல் முதல் அடிமை சுல்தான் குத்புதீன் ஐபெக் முதல் அவுரங்கசீப் முடிய 25 இசுலாமிய மன்னர்களின் வரலாறு மிகச் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. தெரிந்த சில வரலாற்றுப் பதிவுகளை அசை போட்டுப் பார்க்க இந்நூல் பயன்படும். -பின்னலூரான். நன்றி: தினமலர், 23/3/2014.