சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு
சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு, மிஷல் தனினோ, தமிழாக்கம்-வை. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், சென்னை 14, விலை 300ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-635-3.html
வெள்ளைக்காரர்கள் எழுதி வைத்த இந்திய வரலாற்று நூல்கள் என்று ஒரு குரல் அழுது புலம்புவது உண்டு. கிண்டல் பண்ணுவதும் உண்டு. கிழக்கு இந்தியக் கம்பெனியிலும் பின்னால் நிறுவப்பட்ட ஆங்கிலேய அரசாங்கங்களிலும் நிர்வாகப் பொறுப்பிலிருந்த ஜேம்ஸ் டாட், கன்னிங்ஹாம், மேஜர் கால்வின் போன்ற பெருமக்கள் தங்களின் ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி அர்ப்பணிப்பு உணர்வோடு பல வரலாற்று ஆதாரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது பிரமிப்பூட்டுகிற உண்மை. அந்த வரிசையில் மிஷல் தனினோ என்னும் பிரஞ்சுக்காரர் எழுதிய தி லாஸ்ட் ரிவர் – ஆன் தி டிரேல் ஆப் தி சரஸ்வதி இப்போது அழகான தமிழில் வை. கிருஷ்ணமூர்த்தி எழுதி வெளிவந்திருக்கிறது. பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பான தகவல்கள். ஏராளமான படங்கள் வேறு. சரஸ்வதி என்ற பெயரில் ஒரு நதி இருந்து காணாமல் போய், பல கதைகளுக்குக் காரணமாகிவிட்டது என்பது வரலாற்று உண்மை. பூமிக்கு அடியில் கண்ணுக்குத் தெரியாமல் ஓடும் நீரோட்டம் என்று மகாபாரதத்தில் எழுதப்பட்டிருப்பதையும் மிஷல் நினைவுப்படுத்துகிறார். ராஜஸ்தானில் சரஸ்வதி நதி ஓடிய பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பத்து லட்சம் ஆழ்துளைக் கிணறுகளின் தாகத்தைத் தீர்க்கவல்லது என்கிற உண்மையைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆய்வு மைய முன்னாள் இயக்குனராக இருந்த கே.ஆர்.ஸ்ரீநிவாசன் ஓர் அறிக்கையாகத் தந்திருக்கிறாராம். மாரிக் ஆரெல் ஸ்டெயின் என்னும் யூதர் ஒருவர் ஏழு ஆண்டுக் காலம் குதிரை மீதும் கால்நடையாகவும் பயணம் செய்தது நாற்பதாயிரம் கி.மீ. இதற்காக 1904ஆம் ஆண்டு ஆங்கில அரசு இவருக்கு சர்பட்டம் வழங்கி கௌரவித்தது. புத்தமதக் கலைகளையும் கலைப் பொருட்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த இவர் இந்திய அகழ்வாய்வு நிறுவனத்துக்காகவும் வேலை செய்திருக்கிறார். இவர் சரஸ்வதி நதியைப் பற்றி ரிக் வேதம் நதி ஸ்துதி சூக்த ஆதாரங்களை வைத்து ஆய்வு செய்திருக்கிறார். இந்தத் தகவல்களோடு நமது பெருமையையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டோருக்குப் பெருவிந்தான நூல் இது. நன்றி : கல்கி, 20 ஜனவரி 2013.
___
சயாம் பர்மா மரண ரயில் பாதை, சீ. அருண், விலை 130ரூ, சயாம் மரண ரயில், சண்முகம், விலை 150ரூ, தமிழோசை பதிப்பகம், 21/8, கிருஷ்ணா நகர், மணியக்காரம் பாளையம் சாலை, கணபதி, கோவை 641012, To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-407-8.html
கேட்டிருப்பாய் காற்றே என்று மனம் கசந்து கண்ணீர் சின்திய உலகத் தமிழர்களின் அவல வரலாறுகள் ஏராளம். ஆனால் தமிழர்களின் எந்தப் பேரவலமும் உலக வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் பெறுவதில்லை. நீதிமிக்க சமூகத்தின் பார்வைக்கும் வருவதில்லை. இரண்டாம் உலகப் போரின்போது சயாம் பர்மா ரயில் பாதை அமைப்பதற்காக கூலிகளாக ஜப்பானியர்களால் கொண்டுசெல்லப்பட்ட பல ஆயிரம் தமிழர்கள் அந்தப் பணியில் எப்படி அழிக்கப்பட்டார்கள் என்பதை இந்த இரண்டு நூல்களும் மனம் பதைக்கச் செய்யும் வகையில் விவரிக்கின்றன. இரண்டாம் உலகப்போரில் பர்மா, சயாம், சிங்கப்பூர், மலேசியா எனப் பல நாடுகளைக் கைப்பற்றிய ஜப்பான், இந்தியாவின் மீது தாக்குதல் தொடுக்க விரும்பியது. இதற்கு ஜப்பானிலிருந்து படைகளைக் கடல் வழியாக் கொண்டு வர நீண்ட காலம் பிடிக்கும். எனவே சயாமிலிருந்து பர்மா வரை 416 கிலோ மீட்டர் தூரத்திற்கு அது குறுகிய காலத்தில் ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டது. ஐந்தாண்டுகள் செல்லக்கூடிய இந்தப் பணி 16 மாதங்களில் முடிக்கப்பட்டது. ஐந்தாண்டுகள் செல்லக்கூடிய இந்தப் பணி 16 மாதங்களில் முடிக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் இரண்டரை லட்சம்பேர் இறந்துபோயினர். சரியாக வேலை செய்யாதவர்களை ஜப்பானியர்கள் கொன்றனர். கடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கினர். இந்தத் திட்டத்தில் வேலை செய்தவர்களில் 60 சதவீதத்தினர் தமிழர்களே. இந்த இரண்டு நூல்களமே மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் போர்க்குற்றம் குறித்த சாட்சியம் சொல்கிறது. நன்றி: குங்குமம், 21 ஜனவரி 2013.