சாதிக்க ஆசைப்படு
சாதிக்க ஆசைப்படு, முனைவர் செ. சைலேந்திரபாபு, ஐ,பி.எஸ், தமிழில் முனைவர் அ. கோவிந்தராஜு பி.ஆர்.டி, சுரா பதிப்பகம், பக்கம் 240, விலை 150 ரூ.
மானிடர் வாழ்வில் சிறந்த நண்பன் நூல்களே என்று பெரியோர் கூறுவர், ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில், அவர் முன்னேற வழிகாட்டுவது பெற்றோர், ஆசிரியர்கள், மட்டுமன்று. நல்ல நூல்களே என்று துணிந்து கூறலாம். இந்நூல் அந்தவகையில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் பயனுள்ள நூல் ஆகும். நூலாசிரியர், வெறும் உபதேசங்களை மட்டும் கூறாமல், தக்க எடுத்துக் காட்டுகளையும் தந்து நூலை எழுதிச் செல்வது, நூலை அயர்வின்றிப் படிக்க உதவுகிறது. உடலினை உறுதி செய்யவும், மனநலம் நன்கு அமையவும் பண்பு நலம் வளரவும் இக்கருத்துக்களை இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு உதவும். ‘அச்சம்தவிர்’ என்ற தலைப்பில் ஆசிரியர் எழுதியுள்ள செய்திகள் படிப்போர்க்கு மிகவும் உதவும் (பக் 113), மொழிபெயர்ப்பு நூல் என்ற சுவடே தெரியாமல் மூல நுல் போன்றே அமைந்துள்ளது பாராட்டத்தக்கதாகும். – கலியன் சம்பத்து.
திருமுறைத் தலங்களின் தெய்வீக மரங்கள், கு. சேதுசுப்ரமணியன், பத்மா வெளியீடு, பக்கம் 352, விலை 220 ரூ.
சிவபெருமான், தான் விஷத்தை உண்டு, ஏனையவருக்கு அமிர்தத்தை வழங்கியது போல், மரங்கள் விஷத்தன்மையுடைய கரியமிலவாயுவை உட்கொண்டு அமிர்தம் போன்ற பிராண வாயுவை மனிதனுக்குத் தருவதால் மரங்களைச் சிவபெருமானக்கு நிகராக நினைத்து வழிபடலாம். நம் முன்னோர் கோவிலில் உள்ள இறைவனை வணங்குவதுபோல, அந்தத் தலத்திற்கென்று ஏற்பட்டிருந்த தல விருட்சங்களையும் வணங்கிப் பயனடைந்திருக்கின்றனர். நால்வர், பாடிய 274 திருத்தலங்களில் 61 வகையான தல விருட்சங்கள் அமைந்துள்ளன. இந்நூலில் அந்த, 61 வகையான தலவிருட்சங்களைக் குறித்து அமைந்துள்ள புராணக்கதைகள், தாவரவியல் பெயர்கள், வளர்ப்பு முறைகள், அவற்றின் மருத்துவப் பயன்கள் ஆகியவற்றைத் தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர். பல விருட்சங்களின் வண்ணப்படங்கள் நூலுக்குத் தனிச்சிறப்பு சேர்க்கின்றன. சிவா.
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள், கே.வி.நாதன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, பக்கம் 256, விலை 125.
அபூர்வ மருத்துவ குணமுடைய மரம், செடி, கொடிகளை ‘தல விருட்சம்’ என்ற பெயரில் ஆலயங்களில் நட்டு வளர்த்தனர் நம் முன்னோர். ஆலயங்களில் இருந்தால் அவற்றை வழிபட்டதுடன் செவ்வனே பாதுகாக்கவும் செய்தனர். தலவிருட்சங்கள் உள்ள ஆலயங்களின் தலபுராணம். அங்குள்ள தெய்வங்களின் அருட்சக்தி, விருட்சங்களின் அபூர்வ மருத்துவ குணங்கள் ஆகியவற்றை மிக விளக்கமாக விவரித்திருக்கிறார் ஆசிரியர். – மயிலை சிவா.
பெண்பாற் புலவர்கள், கிளமெண்ட் ஈஸ்வர், லீலி பப்ளிகேஷன்ஸ், புதுச்சேரி, 04132344534, பக்கம் 104, விலை 80 ரூ.
இத்தொகுப்பு நூல் பெண்பாற்புலவர்கள் 33, பிற்காலப் புலவர்கள் 22, கற்காலக் கவிஞர்கள் 16, என 70 தமிழ்க் கவிஞர்கள் பற்றி, சிறு குறிப்போடு தந்துள்ளார் நூலாசிரியர். இந்திய பெண் எழுத்தாளர்கள் பற்றி, நடுவண் அரசு பதிப்பகத்துறை வெளியிட்ட ஆங்கிலக் குறிப்பினையும் இணைத்துள்ளார். மாணவர்கள் படித்துணர வேண்டிய நல்ல நூல். – குமரய்யா.
மேடைச் சொற்பொழிவு, பத்திரிகைகளில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு, பொதுவுடைமைப் போராளி ஏ.எம்.கோடி, சு. சுபாஷ் சந்திரபோஸ், பாவை பப்ளிகேஷன்ஸ், பக்கம் 266, விலை 125 ரூ.
ஏ,எம்.கோடி வின் வாழ்க்கை, அரசியல் அனுபவங்களை எழுதியுள்ள ஆசிரியர் அத்துடன் அன்றைய தஞ்சை மாவட்டத்தின் நிலக்கிழார்களின் ஆதிக்க வெறியினையும், உயர் சாதியினரின் மேட்டிமைப் போக்கையும், பற்றியும் எழுதியிருக்கிறார். 40-50களில் தமிழகத்தில் இருந்த பொதுவுடைமை இயக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியன, இந்த நூலில் இருக்கிறது. நன்றி: தினமலர், 23 செப்டம்பர் 2012.