சிந்தனை வகுத்த வழி
சிந்தனை வகுத்த வழி, ர.சு. நல்லபெருமாள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 478, விலை 180ரூ.
இன்றைய உலகம் என்பது மானுடத்தின் சிந்தனை வழியில் உருவானது. அதாவது உலக வரலாறுதான் இந்த நூல். ர.சு. நல்லபெருமாள் நாவலாசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு கதை போலச் சொல்லிச் சொல்கிறார். 1965 இல் வெளியான இந்த நூல் தொடர்ந்து 3வது பதிப்பைக் கண்டிருக்கிறது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நூல் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படித்தால், இந்த உலக வரலாற்றைப் பல்வேறு தலைப்புகளில் மிக அழகாக தனித்தனியாக விவரிக்கும் அழகை ரசிக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் கூகுள் தேடல்களில் எல்லாவற்றையும் சுட்டுவிட முடிகிறது. அன்றைய தினம் அவர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பிடும் புத்தகங்களைப் படித்திராவிட்டால் இந்தச் சுருக்கமான வரலாறு சாத்தியமே இல்லை. இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவருடைய மொழிநடை சலிப்பில்லாமல் இருக்கிறது. அதுதானே நல்ல எழுத்தாளனுக்கு அடையாளம். நன்றி: தினமணி 2/4/12.
—-
வழக்கு மன்றத்துக்கு வந்த தெய்வங்கள், அருண் சரண்யா, கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங்ஸ், 47, ஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 32, விலை 55ரூ.
தன்னை சரணடைந்த பக்தர்கள் பெரிய துன்பத்தில் இருக்கும்பொழுது அதில் இருந்து அவர்களை விடுவிக்க இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து உதவிபுரிவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் இறைவனிடம் நமக்குள்ள பற்றுதலை மேலும் வலுவடையச் செய்கிறது. அந்த வகையில் வழக்குகளில் சிக்கிய தனது பக்தர்களை அதில் இருந்து விடுவிப்பதற்காக வழக்காடு மன்றங்களுக்கே இறைவன் வந்து சாட்சியம் அளித்த பல புராணக் கதைகளின் தொகுப்பே இந்த நூல். பக்தி பரவசம் பொங்கும் பல கதைகளை தொகுத்து, அதில் தனது எழுத்துக்களையும் கோர்த்து மேலும் பக்தி ரசம் சொட்டச் செய்துள்ளார் நூல் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி 10/4/13.