சிபி
சிபி, ஏ.ஏ.ஹெச்.கே.கோரி, இருவாட்சி, 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 288, விலை 170ரூ.
சிறுபான்மை பிரிவு என்பதன் சுருக்கமே சிபி என்னும் நாயகனின் பெயராக இருக்கிறது என்பதைப் படிக்கும் இடத்திலிருந்தே சுவாரஸ்யம் தொடங்கிவிடுகின்றது. கற்பனைப் பாத்திரங்களோடு மகாத்மாகாந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்ற அரசியல் தலைவர்களையும் இந்தத் தலைமுறைக்குத் தெரியாத அவர்களின் அரிய குணங்களையும் நம் கண்முன் தரிசனப்படுத்துகிறது இந்நாவல். மேற்கத்திய கலை வடிவமான டாக்குடிராமா என்னும் யுக்தியில் எழுதப்பட்டிருககும் இந்த நாவலில், இறந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் பின்னிப் பிணைந்திருப்பது சிறப்பு. காங்கிரஸ், கட்சிகளின் கோஷ்டி, அரசியல் திராவிடக் கட்சிகளின் இலவச அரசியல் போன்றவற்றைக் குறித்து விமர்சனமும், பூரண மதுவிலக்கு, பொது இடங்களில் புகைப்பிடித்தலுக்கு எதிரான சமூகத்தின் மீதான கரிசனமும் நூல் முழுவதும் விரவியிருக்கின்றது. சிறுபான்மைப் பிரிவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிப்பார்க்கும் நாயகனின் கனவை நிஜமாக்குவதில் தடாலடி சினிமா பாணியைத் தவிர்த்து, சரியான திட்டமிடலுடன் நிகழ்த்தியிருப்பது நயம். ஆஸ்கார் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படங்களின் மீதெல்லாம் விமர்சனம் வைக்கும் நூலாசிரியர்,சிறுபான்மை பிரிவினருக்குக்கிடையே நிலவும் கோஷ்டி அரசியலையும் நாவலில் விமர்சித்திருக்கலாம். நன்றி: தினமணி, 4/3/2013.
—-
வாருங்கள் செல்வங்களே விஞ்ஞானி ஆகலாம், ஆர்.வி.பதி. பாலாஜி, வரைகணினி பயிலகம், இராமநாதபுரம், கோயம்புத்தூர் 45, விலை 56ரூ.
குழந்தைகளுக்கு புதிய புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம். அவர்களின் ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 50 விஷயங்கள் (கண்டுபிடிப்புகள்) பற்றியும் அவற்றைக் கண்டறிந்தவர்கள், ஆய்வாளர்கள் பற்றியும் விளக்கும் வகையில் இந்நூல் விஞ்ஞானிகளின் புகைப்படங்களுடன் வெளிவந்திருக்கிறது. நன்றி: இந்தியாடுடே, 13/3/2013.
—-
தியாக வேங்கை தீரன் சின்னமலை, செவல்குளம் ஆச்சா, வின்வின் புக்ஸ், 1620, அண்ணாநகர், சென்னை 40, விலை 40ரூ.
தீரன் சின்னமலையின் வரலாற்றை கதை வடிவில் கூறும் சுவையான நூல். ஆனால் சின்ன மலையை நூலெங்கும் அவர் என்று விளிக்கும் நூலாசிரியர் ஹைதர் அலி, திப்பு சுல்தான், சோழ மன்னன், ஆற்காடு நவாப் முதலியோரை அவன் இவன் என்று ஏகவசனத்தில் குறிப்பிட்டிருப்பது இயல்பானதுதானா? நன்றி: இந்தியாடுடே, 13/3/2013.