சிலம்பில் ஈடுபட்டது எப்படி
சிலம்பில் ஈடுபட்டது எப்படி, ம.பொ. சிவஞானம், ம.பொ.சி. பதிப்பகம், பக். 96, விலை 50ரூ.
சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுவதற்கு காரணமாக அமைந்த உணர்வுகளை, மனம் திறந்து ம.பொ.சிவஞானம் பேசும் நூல். மனைவி ராஜேஸ்வரி, நான் கண்ணகியாய், ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பேன் என்று கூறிய வீரவுரையைக் கேட்ட பிறகு ம.பொ.சி இந்த தலைப்பில் நீண்ட ஆய்வு செய்து இந்த நூலை அவருக்கே அஞ்சலி ஆக்கியுள்ளார். 1934ல் வெளியான நவீன கோவலன், 1946ல் கண்ணகி, 1966ல் பூம்புகார் ஆகிய திரைப்படங்களால் சிலப்பதிகாரம் தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றதை சிறப்புடன் விளக்கியுள்ளார். தெருவெங்கும் சிலப்பதிகாரத் தமிழ் முழக்கம் செய்து வெற்றிகண்ட ம.பொ.சி.யின் போராட்டப் பதிவு நூல். -முனைவர் மா.கி.ரமணன்.
—-
தொல்காப்பியத்தின் வீரநிலைக் கால எச்சங்கள், கு.வெ. பாலசுப்பிரமணியன், தமிழ்ப்பேராயம், பக். 112, விலை 70ரூ.
கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தொல்காப்பியத்தில், சொல்லப்பட்டுள்ள, தமிழர்களின் வீரநிலை பற்றிய செய்திகள் மிகக் குறைவானவை. தொல்காப்பியத்திற்கும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, தமிழர்களின் வீரநிலைக் காலம் என்பதை, இந்த நூல் ஆதாரங்களுடன் தருகிறது. வீரநிலைக் காலம் என்பது சமயமும், தத்துவமும் தோன்றாத காலம். அந்தக் காலம் இனக்குழுக் காலம். இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையைப் போர் என்பது பொருந்தாது. அதை பூசல் என்றே தெரிவிக்க வேண்டும் முதலான செய்திகளை அழகாகத் தெரிவிக்கிறது இந்த நூல். பிராகிருத மொழிக்கு, இலக்கணம் வகுத்த சாகடாயணரும், சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் வகுத்த பாணினியும், தொல்காப்பிய இலக்கணத்தை அறிந்து இலக்கணம் வகுத்துள்ளனர் எனத் தெளிவுபடுத்தியுள்ளார் கு.வெ.பா. -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 26/1/2014.