செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்
செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம், முனைவர் க. முருகேசன், பக். 170, விலை 80ரூ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை 98.
பாரதியின் பார்வையில் பிரபஞ்சம், கம்பனில் விழுமிய வாழ்வியல், கட்டடக்கலையைத் தொட்டிடும் சிலம்பு, மணிமேகலையில் அறம், இலக்கியங்களில் கொடியசைதல், குறுந்தொகையில் இலக்கிய நயங்கள், நற்றிணையில் பண்பாட்டுப் பதிவுகள், புறப்பாடல்களில் புரவலர், புலவர் மரபு, ஐந்தெழுத்து மந்திரச் சிறப்பும் திருநீற்று, மகிமையும், மணிவாசகரின் அறிவியல் சிந்தனைகள், ஆண்டாள் பாசுரங்களின் அகப்பொருள் கூறுகள் ஆகிய 11 கட்டுரைகளும் உண்மையாக செந்தமிழ் கோயிலுக்குச் சிற்பங்களாக அமைந்துள்ளன. ‘கலை என்பது ஒரு நாட்டின் தனிப்பண்பாட்டின் துல்லியமான அளவுகோலாகும். இவ்வுன்னதமான கலை மனிதகுலம் முழுமைக்கும் பொதுவாக, பல்வேறு மொழி, கலாசார வேறுபாடுகளைத் தாண்டி, தேசங்களுக்கு இடையிலான விரிந்த எல்லைகளைக் கடந்து மனிதர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு மகத்தான சாதனம் எனலாம். இலக்கியம், இசை, சிற்பம், ஓவியம், கட்டடம் ஆகிய கலைகளின் வளர்ச்சிதான் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியையும், அதன் முன்னேற்றத்தையும் அளக்கவல்ல அளவுகோலாகத் திகழ்கிறது’ என்று கட்டக்கலை பற்றிய கட்டுரையில் கூறியிருப்பது எந்த அளவுக்கு உண்மை என்பது இலக்கியம் பயின்றவர்களுக்கும் புரியும். ஒரு முறை மட்டுமல்ல பலமுறை இந்தக் கோயிலின் சிற்பங்களைக் கண்டு ரசித்து மகிழ்ந்து பாதுகாக்கலாம். நன்றி: தினமணி 31-10-2011.
—-
தஞ்சை தந்த ஆடற்கலை, முனைவர் சண்முக செல்வகணபதி, முனைவர் செ. கற்பகம், தஞ்சை பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர் – 9, பக். 144, விலை 100ரூ.
தமிழிசை இயக்கம் தோன்றி 80 ஆண்டுகள் ஆயினும், தமிழிசை இயக்கத்துக்கு ஆதரவானவர்கள் அரசு கட்டிலேறி நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் தமிழிசை ‘துக்கடா’வாகவே இருக்கிறது. இந்த நிலையைப் போக்கி ‘துக்கடா’ இசைத் தமிழையும் நாட்டியத்தையும் எடுத்துக்கூறி தமிழ்த் தொண்டாற்றி வருகிறார் சண்முக. செல்வகணபதி என்கிற சு. கோவிந்தராசனின் அணிந்துரை தமிழிசையின் நிலையை எடுத்துக் கூறகிறது. இசைத்தமிழ் வளர்ச்சி குறித்த பலரது ஏக்கத்தையும் வருத்ததையும் நூலாசிரியர் இருவரும் போக்கியிருக்கிறார்கள். தஞ்சை பெரியகோயிலில் காணப்படும் 81 கரணசிற்பங்கள் (கரணம் – முத்திரை) புகைப்படமும், ஸ்ரீராமதேசிகன் நூலில் காணப்படும் வரைபடங்களும் ஒப்புநோக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சை தந்த ஆடற்கலை, சோழர், நாயக்கர், மராட்டியர் காலத்தில் இருந்த ஆடற்கலை. கல்வெட்டுக்கூறும் நாட்டிய இசைக்குழு, தஞ்சாவூர் கரணச் சிற்பங்கள், கரணங்களும் அங்ககாரங்களும் அடைவு வரிசைகளும் என மொத்தம் 9 தலைப்புகளில் இசை மற்றும் நாட்டியத்தைப் பற்றிய அருமையான தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். இறுதியில் தஞ்சை பெரியகோயிலின் ஆயிரமாண்டு நிறைவு விழா பற்றிய தகவல்கள் அறியப்பட வேண்டியவை. இசைக்கும் நாட்டியத்துக்கும் நூலாசிரியர் இருவரும் செய்திருக்கும் தொண்டு காலத்தால் அழியாதது. நன்றி: தினமணி 31-10-2011.