செம்பியன் செல்வி
செம்பியன் செல்வி, கோவி. மணிசேகரனின், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 525ரூ.
கலிங்கம் எறிந்த கருணாகரத் தொண்டைமானைப் பற்றி ‘கலிங்கத்துப்பரணி’ எனும் தமிழின் தவக்காவியம் புகழ்கிறது. அந்த கருணாகரத் தொண்டைமானைக் கதாநாயகனாகக் கொண்டு எழுந்த உரைநடைக் காப்பியமே இந்த பல்லவ சரித்திர நாவல். புலவர்கள் மத்தியில் கருணாகரனுடைய வீரம் அருமையான காவியமாக உலவி வருகிறது. இதயத்தை மகிழ்விக்கும் வர்ணனைகள், உள்ளத்தைத் திடுக்கிட வைக்கும் போர்க் காட்சிகள், உணர்ச்சியைக் கவரும் காதல் நிகழ்ச்சிகள், சுவையோடு செல்லும் சம்பவக் கோவை – இவை அனைத்தும் நிரம்பியிருக்கின்றன. நாவலாசிரியர் ‘இலக்கிய சாம்ராட்’ கோவி. மணிசேகரனின் வரலாற்று ஆராய்ச்சியும், கதை சொல்லும் ஆற்றலும் இந்த புதினத்தில் நன்கு ஒளிர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 24/3/2015.
—-
சித்தர் பாடல்கள், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 700ரூ.
இறைவன் உண்மை வடிவமாக இருக்கின்றனான். எனவே அவனை வெளியே தேடாமல் தியாகம், யோகம் மூலம் தங்கள் உடலுக்குள்ளேயே கண்டு வணங்கியவர்கள் சித்தர்கள். அவர்கள் தம் இனிய பாடல்களால் சமூகத்தில் நிலவி வந்த மூட பழக்க வழக்கங்களை ஒழித்து, புற சமய சடங்குகளைச் சாடி தம் செயலில் வெற்றி கண்டவர்கள். அத்தகைய சித்தர்கள் பாடிய பாடல்களை தொகுத்து, அதற்கு எளிய நடையில் உரை எழுதியுள்ளார் முனைவர் தமிழ்ப்பிரியன். இதில் பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், சிவவாக்கியர், அழுகணிச் சித்தர் உள்பட 18 சித்தர்களின் பாடல்களும், பொருளுரையும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/3/2015.