செள்ளு
செள்ளு, செல்வராஜ், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 96, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-712-7.html
கடல் பற்றி நமக்குத் தெரிந்த அளவுக்குக்கூட கடலோர மக்களின் வாழ்வு பற்றி தெரிவதில்லை. இந்த நிலையில், கடலோர மக்களின் வாழ்வைத் தழுவி நெய்தல் நிலத்து இலக்கியமாக வந்திருப்பதுதான் செல்வராஜின் செள்ளு சிறுகதைத் தொகுப்பு. தென்தமிழகத்தில் குமரி மாவட்டத்தின் அரபிக் கடலோரத்தில் வாழும் பாரம்பரிய மீனவச் சமூகமாக முக்குவர்களின் வாழ்வை, அவர்களின் காதலை, துன்பத்தை, நொய்மையை, தேடலை, அரசியலின் நிராகரிப்பைப் பேசுகிறது இந்தச் செள்ளு. செள்ளு என்றால் மீனின் மேலுள்ள செதில் என்று பொருள். செதிலை நீக்கிவிட்டுத்தான் மீனை சமையலுக்குப் பயன்படுத்த முடியும். அப்படி தன் சமூகத்தின் மீது படிந்துள்ள செதில்களை இந்தக் கதைகளின் மலம் கழுவ முயன்றுள்ளார் நூலாசிரியர் செல்வராஜ். இந்தப் புத்தகத்தின் மொழிநடை, தமிழ் இலக்கியத்துக்குப் புத்தம் புதியது. மெலிஞ்சியாரு-கோயிலில் மணி அடிக்கும் பணியாளர், குசினிக்காரன்-சமையல்காரன், அம்மாணை- மீனவர்களின் ஹாக்கி போன்ற பாரம்பரிய விளையாட்டு, துருசமா-வேகமா, கும்பாயிரி-உயிர் நண்பன், சீணம்-உடல் அசதி, ஓசுவனம்-மீன்பாடு, வேளம்-விஷயம், வார்த்தை, பொழி-ஆறு இவை மீனவர்களின் வாழ்வில் கலந்துள்ள கலைச்சொற்கள். வறுமைச் சூழலால் கல்வி மறுக்கப்பட்டு, தன் தந்தையின் தொழிலான கடல் தொழிலுக்கே திரும்பிச் செல்லும் ஒரு சிறுவனின் வாழ்வையும், குடும்பத்தின் துன்பத்தையும் பேசுகிறது ஒரட்டி என்கிற கதை. செள்ளு கதை, படிப்பைத் தொடர முடியாத மகள், மால் (மீன் வலை) கம்பெனிக்கு வேலைக்குச் செல்லும் துயரத்தைப் பதிகிறது. இந்தத் தொகுப்பில் மகேசுவரியும் தெக்கு ஆறும் கதை கலங்க வைக்கிறது. முன்பு குமரிக்கரையில் தொடங்கி கேரளம் வரை படகுப் பயணத்துக்குப் பயன்பட்ட இந்தத் தெக்கு ஆற்றை இப்போது சூறையாடிவிட்டார்கள். விளைவு, கால்வாய் தேய்ந்து பல இடங்களில் சாக்கடையாகிவிட்டது. அழகிய மகேசுவரி, நோய்வாய்ப்பட்டு தேய்ந்து மடிகிறாள், அந்த ஆற்றைப்போல. மகேசுவரியின் வாழ்வை தெக்கு ஆற்றோடு இணைத்து இறுதியில் மகேசுவரி மடிகிற இடத்தில் கண்ணீரை வரவழைத்துவிடுகிறது கதை. பொதுவாக தண்ணீர் பற்றிப் பேசுவார், கடலில் கலந்து வீணாகும் தண்ணீரைத் தடுக்க வேண்டும் என்று பேசுவர். ஆனால் அது ஒரு மீனவ சமூகத்தின் நோக்கில் எப்படி பார்க்கப்படுகிறது? கடல் தொழிலும் ஒரு வெவசாயந்தான். நல்ல மீன் வௌச்சல் வரணும்னா நல்லத் தண்ணியும் வேணும். ஒவ்வொரு பொழியும் கடலுலப் போய்ச் சேருத எடம் பல ஆயிரக்கணக்கான உயிர்வளுக்கு ஜென்மம் குடுத்த எடம். மீனுவ அதிகமா குஞ்சு பொறிச்சுது அந்த எடங்களுலதான்- மகேசுவரியும் தெக்கு ஆறும் கதையில் உள்ள இந்த வரிகள், கடலில் நன்னீர் கலக்கும் உயிர்ச்சூழலின் அவசியத்தை உரித்து வைக்கிறது. குமரி மாவட்டக் கடலோர கிராமமான சைமன் காலனியில் பிறந்த செல்வராஜ். தன் சமூக மக்களின் வாழ்வை மையமாக வைத்து எழுதியிருக்கும் செள்ளு சிறுகதைத் தொகுப்பில், மொத்தம் ஆறு சிறுகதைகளே உள்ளன. ஆனால் அந்த ஆறும் தமிழகத்தின் அறியப்படாத தமிழர்கள் அறிந்திராத பிரதேசம் ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நன்றி:விகடன்