செவ்விலக்கிய சிந்தனைப் புதையல்
செவ்விலக்கிய சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம் 612901, பக். 160, விலை ரூ.150.
இந்த நூல் தமிழர் வரலாறு. பண்பாட்டு செய்திகளைப் பற்றியது. இதில் அமைந்துள்ள இருபது கட்டுரைகளும், இனியவை இருபது என்று சொல்லத்தக்க அளவில் சிந்தனையைத் தூண்டுவனவாக உள்ளன. சங்க கால மன்னர்களான கரிகாலன், நன்னன், மலையமான் பற்றிய தகவல்களும், நவிர மலை, கபிலர் குன்று, பெருமுக்கல் மலை அரிக்கமேடு ஆகிய வரலாற்றுத் தலங்களைப் பற்றிய அரிய செய்திகளும், குறுந்தொகை மலைபடுகடாம், பட்டினப்பாலை, சிலம்பு, திருக்குறள், சங்கப் பாடல்களில் வாய்மொழி இலக்கியத்தின் தாக்கம் ஆகியவை பற்றியுமான நுண்ணிய பார்வைகளும், சிந்தனைக்கு விருந்தாக அமைவன. சங்கப் பாக்களைப் பின்னாளில் பாடுவாரின்மையால், அவை வாய்மொழியாகப் பாடப்பட்டன என்ற ஆசிரியர்களின் கருத்து, சிந்திக்கத்தக்கது. சிலம்பில் இசை தொடர்பான தகவல்களை இரு கட்டுரைகள் உணர்த்துகின்றன. திருக்குறளுக்கு உரை எழுதியோர் அதை எவ்வெவ்வகையில் எதிர்கொண்டனர் என்பதைச் சில கட்டுரைகளில் தெரிவிக்கிறார் ஆசிரியர். பரிமேலழகரின் நிறை குறைகளைப் பாவாணர் எவ்வாறு உணர்த்துகிறார் என்பதனையும், திராவிட இயக்க உணர்வினர் குறளைத் தங்களது கருத்தியலுக்கான கருவூலமாகக் கொண்டு உரை எழுதியிருப்பதையும் விரிவுபட விளக்குகிறார். குறுந்தொகை பற்றிய கட்டுரையில், அந்நூலில் இடம் பெறும் குளகு, குறியிறை போன்ற சொற்களுக்கு பொருள் முடிபு காண்பது பாராட்டுக்குரியதாய் உள்ளது. -ராம.குருநாதன். நன்றி: தினமலர், 18/12/13.
—–
கண் நோய்களும் பாதுகாப்பு முறைகளும், டாக்டர் வி.எம்.லோகநாதன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை ரூ.90.
மனித உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்றான கண்களின் அமைப்பு வண்ணப் படங்கள் மூலமாக விளக்கப்பட்டுள்ளது. கண் நோய்களில் இருந்து கண்களை காப்பது, மாறுகண் சிகிச்சை, கண் வங்கி முகவரிகள், கண் தான விவரங்கள், கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் போன்ற விவரங்கள் எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 18/12/13.