சேகுவாராவின் பொலிவியன் டைரி
சேகுவாராவின் பொலிவியன் டைரி, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 220ரூ.
சேகுவாரா கொரில்லாப் படையின் தலைவராக இருக்கும்போது, 1956-58ம் வருடங்களில் நடைபெற்ற கியூபாவின் புரட்சிப் போராட்டத்தின் போது நாட்குறிப்பில் தினசரி நிகழ்வுகளை எழுதுவது வழக்கம். தினசரிக் குறிப்பு எழுதும் பழக்கம் அவரிடம் இருந்ததால், பொலிவியாவில் கழிந்த அவரது கடைசி நாட்களைப் பற்றிய விவரமான தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, திருத்தப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. நாட்குறிப்பு முழுவதும் சே. குவாராவால் பல புனைபெயர்கள் மற்றும் அடைப்பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. சில சமயம் ஒரே நபரைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார். பொலிவியப் புரட்சியின் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட சில முக்கியமான ஆவணங்களும், நகரத்துப் போராளிகளுக்கு விடுத்த ஆணைகளும், பொலிவிய மக்களுக்கு அறிவிப்புகளும், போராட்டத்தில் சே குவாரா சந்தித்தவர்களும் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களும் இடங்களும் பின்னிணைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பிடல் காஸ்ட்ரோவின் அறிமுக உரையும், கேமிலோ குவாராவின் முன்னுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி.
—-
இஸ்லாமிய சட்டக் கருவூலம், இஸ்லாமிய நிறுவனம், சென்னை, விலை 130ரூ.
இஸ்லாம் கூறும் மார்க்கச் சட்டங்கள் குறித்து இஸ்லாமிய சட்டத்துறை வல்லுநர் அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக், அரபு மொழியில் எழுதிய நூல் பிக்ஹுஸ் சுன்னா. இந்த அடிப்படை மார்க்கச் சட்டங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எளிய தமிழில் மவ்லவி நூஹ் மஹ்ழரி மொழிபெயர்த்துள்ளார். ஏற்கனவே இது தொடர்பான மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த நான்காம் தொகுதியில் நோய், மரணம், அடக்கம்செய்தல், தியானம் (திக்ரி), பிரார்த்தனை போன்ற தலைப்புகளில் மார்க்கச் சட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமிய சட்ட விளக்கங்களை அறிந்து அதன்படி ஒழுக வேண்டும் என்று எண்ணும் ஒவ்வொரு முஸ்லிம்களின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி.