சேரன் குலக்கொடி
சேரன் குலக்கொடி, கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, பக். 572, விலை 425ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-2.html
தமிழர் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்றுப் புதினம். இசையும், நாட்டியக் கலை நுணுக்கங்களும் இடம் பெற்றுள்ள இந்த நாவல், பண்டைய தமிழக வரலாற்றை நம் கண் முன் நிறுத்துகிறது. வானவன் வஞ்சி, மீனவன் மோகூர் ஆகிய இரு காண்டங்களைக் கொண்டுள்ள இந்த படைப்பு 1972இல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல் என்பது சிறப்பு. செங்குட்டுவனின் மனைவி வேள்மாளின் தங்கையான பொற்கொடியை வாசகர்கள் மனதில் நீங்காத உயிரோவியமாக்கி விட்டார். கோவி. மணிசேகரன். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் இந்த நாவலில் ஒரு பாத்திரமாகவே வருகிறார். இளங்கோவடிகள் பொற்கொடி உரையாடல் நாவலில் உயிரோட்டமாய் அமைந்துள்ளது. மோகத்தில் திளைந்த மோகூர் அரசனான திருமாறன், ஏகபத்தினி விரதனாக இல்லாததால் தன்னைத் தீண்ட அனுமதிக்காத மனைவி பொற்கொடியின் அகால இறப்புக்குக் காரணமாகிறான். போரில் தோற்று மரணத்தின் கடைசி மச்சில் கற்பின் சிகரமே கலமெல்லாம் நீ வாழ்க என்று திருமாறன் வாழ்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியை இரு பாத்திரங்களாக்கி உலவவிட்டுள்ளார் நூலாசிரியர். தங்கை மலர்க்குழலியை கலையரசியாகக் காட்டி, தமக்கையாகிய திருமேனியை தியாகத்தின் சுடராகப் படைத்துள்ளார். சிலபத்திகாரத்தில் எப்படி ஊழ்வினை காரணமாக நிற்கின்றதோ அப்படியே இந்தப் புதினத்திலும் ஊழ்வினை காரணமாக நிற்கிறது. நன்றி: தினமணி, 23/9/2013
—-
சித்தர்கள் வாழ்வில், புலவர் எம்.எஸ். சுப்பிரமணியம், திருவரசு புத்தக நிலையம், தி.நகர், சென்னை 17, பக். 104, விலை 40ரூ
எல்லாமும் வல்ல இறைவனையே எந்நேரமும் சிந்தித்து, வல்லமை பெற்று, செயற்கருஞ்செயல்கள் புரிந்து வாழ்ந்தவர்கள் சித்தர்கள். சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் நிறைந்த பாடல்களையும் அவர்கள் பாடியுள்ளனர். சித்தர்கள் நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சிகளை, 21 கட்டுரைகளாக நூலாசிரியர் எழுதியுள்ளார். மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர், குதம்பைச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர், இடைக்காட்டுச் சித்ததர், உட்பட பல சித்தர்கள் நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சிகளைக் கதைப்போல ஆக்கித் தந்துள்ள நூலாசிரியர் பாராட்டுக்குரியவர். கடந்த 35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்த புலவர் சுப்பிரமணியம், தன் பெயரின் முன்னெழுத்துக்களைத் தமிழில் எழுதியிருக்கலாம். ஆங்கிலத்திலத்தில் எழுத ஏதேனும் காரணம் இருக்குமோ? வாழ்க அவர் தம் புலமை. -பேரா. ம. நா. சந்தான கிருஷ்ணன். நன்றி: தினமலர், 18/8/2013