சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 6
சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 6, முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 696, விலை 10 தொகுதிகளுக்கும் சேர்த்து ரூ. 15,000.
சைவ சமயக் கலைக் களஞ்சியம் ஆறாம் தொகுதியான சைவ சமய அருளாளர்கள் எனும் இப்பெருநூல் பற்பல சான்றோர்களின் எண்ணக்களஞ்சியம். ஆசிரியர் செல்வக்கணபதியின் பத்தாண்டு கால உழைப்பில் உருவான வண்ணக் களஞ்சியம். சைவ சமயம் தமிழகம் எனும் முதல் தொகுதியில் தொடங்கிய தோரணவாயில் எனும் பத்தாம் தொகதியாக நிறைவு பெறும் இத்தொகுப்பின் ஆறாம் தொகுதியே சைவ சமய அருளார்கள் எனும் இத்தொகுப்பாகும். அகத்தியர், அகோரசிவாச்சாரியார் எனத் தொடங்கும் செய்தித் திரட்டுக்கள் வைத்தியலிங்க சுவாமிகள், ஸ்ரீதர் சுவாமிகள் என 711 தலைப்புகளில் தொகுக்கப்பட்டு கற்பகத் தருவின் அற்புதக் கனிகளாய் கற்போர்க்குக் கிடைக்கின்றன. பின்னிணைப்பில் அருளாளர் அபிராம பட்டரின் அருள் வரலாறு ஒரு நுண்ணாய்வு. அபிராமி பட்டர் குறித்த நோக்கரிய நோக்கு நுணுக்கரிய நுண்ணுணர்வு என்பதாக அமைந்துள்ளது. பின்னிணைப்புகள் 2, 3 பகுதிகளில் விரிவான வரலாறு அறியப்படாத சைவ சமய அருளாளர்கள், சித்தர்கள், சிவம், பெருக்கிய சீலர்கள் குறித்தும் அவர்கள் சமாதி கூடியுள்ள விவரங்கள் குறித்தும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. சான்றாக, சாங்கு சித்தர், கர்லாக்கட்டை சித்தர், சுடுகாட்டு சுவாமிகள், உறிகட்டிசுவாமி, தகர தட்டி தாத்தா போன்ற சித்தர்களின் தொகுப்பு இது வரையிலும் பதிவு செய்யப்படாதவை, புதியவை. புதுச்சேரி சித்தர்கள் வரிசையில் அப்பா பைத்திய சுவாமிகள் வரலாற்றில் ஆச்சரியமான சில செய்திகள் தரப்பட்டுள்ளன. அப்பா பைத்திய சுவாமிகளின் பூர்வீகம் பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூர். அவன் ஜமீன் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பன போன்ற செய்திகள், படிப்பவரை வியப்பில் ஆழ்த்துகின்றன. தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர் தொடங்கி, பக்திக் காலத்தில் வாழ்ந்த தேவார மூவர், காப்பிய காலத்து அருளாளர்கள், சரபோஜி மன்னர் காலத்து அருளாளர்கள் எனத் தொடர்ந்து இருபதாம், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் நம்முடன் வாழ்ந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வரலாறு வரையிலும் தொகுக்கப்பட்டுள்ள அனைத்தும், இந்நூலின் பட்டின் இழைகளாகய் சுடர்விடுகின்றன. ஜொலிக்கின்றன. கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் பிறந்த ஊர் கங்கை கொண்டான். ஆயினும் கோடகநல்லூரே அவரது துறவு யோகத்திற்கு நிலைக்களம் எனத் தொடங்கி, இவரது சீடர்களில் ஒருவரே தமிழ்த் தாய் வாழ்த்தைப் பாடிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எனும் செய்தியும், அவர் படைப்பில் காணப்படும் சுந்தர சுவாமிகள், இத்தவச்சீலரே என்பதும் குறிப்பிடத்தக்கவை. விரித்துரைப்பின் வேதாந்தமாகும் எனும் மகாகவி பாரதியின் வார்த்தைகள், இக்கலைக் களஞ்சியத்திற்கே பொருந்தும். தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல். -பேரா. முனைவர். கு. ஞானசம்பந்தன். நன்றி: தினமலர், 22/9/2013.