ஜெயகாந்தன் கதைகள்
ஜெயகாந்தன் கதைகள், தொகுப்பாசிரியர் என். ராம், வனிதா ராம், விகடன் பிரசுரம், சென்னை, 2, பக். 368, விலை 350ரூ.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் சார்பாக இலக்கியத்தில் எழுந்த முதல் குரல் ஜெயகாந்தனுடையது. வணிகப் பத்திரிகைகளும் நல்ல படைப்பும் ஒரு புள்ளியில் இணைய முடியும் என்பதை மெய்ப்பித்தவர். அவர் ஆனந்த விகடன் இதழில் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதிய சிறுகதை, குறுநாவல், முழுநாவல் என கலந்து 17 கதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்நூல். வெளிவந்த காலத்தில் வாசகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பிரளயம், சுயதரிசனம், அக்கினிப்பிரவேசம், அக்ரஹாரத்துப் பூனை, ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, அந்தரங்கம் புனிதமானது, சீசர் போன்ற கதைகள் இவற்றுள் அடக்கம். விழுதுகள் ஓங்கூர் சாமியையும், பிரளயம் அம்மாசிக் கிழவனையும், சுயதரிசனம் கணபதி சாஸ்த்திரிகளையும், சீசர் சீதாராம ஐயரையும், அக்கினிப் பிரவேசம் அவளையும், யாரால்தான் மறக்க முடியும்? அவர்களையெல்லாம் மீண்டும் சந்திக்கும் நெகிழ்ச்சியான உணர்வை இந்நூல் ஏற்படுத்துகிறது. அதுவும் அன்றைக்குப் பார்த்த அதே படங்களுடன் படிக்கும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது. குறிப்பாக சுயதரிசனம், சீசர் கதைகளுக்கான கோபுலுவின் படங்களும், அக்கினிப் பிரவேசம், இறந்த காலங்கள் போன்ற கதைகளுக்கான மாயாவின் படங்களும் பிரமிப்பூட்டுபவை. எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வராத காலத்தில் வெளியானது போலவே இக்கதைகள் வெளியாகியிருப்பதால் கதைகளோடு கூடுதல் நெருக்கம் ஏற்படுவது உண்மையே. ஆயினும் அப்போது ஆனந்த விகடன் வெளிவந்த சைஸில் இந்நூல் இல்லாமலிருப்பதும், பள பள காகிதத்தில் அச்சாகியிருப்பதும் வாசகனைச் சற்று அந்நியப்படுத்தவே செய்கின்றன. காரணம் ஜெயகாந்தனின் கதைகள் எப்போதுமே ஒப்பனைகளற்று மண்வாசம் வீசுபவை. நன்றி: தினமணி, 11.8.2014.
—-
பசுமை வளையம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 95ரூ.
14 சிறுகதைகள் கொண்ட நூல். துல்லியமான மற்றும் தேவையான விவரங்களுடன் மன நிறைவு தரக்கூடிய தரமான கதைகளைப் படைத்துள்ளார் நூலாசிரியர் ஆட்டனத்தி. நன்றி: தினத்தந்தி, 13/8/2014.