ஜெயந்தி சங்கர் நாவல்கள்
ஜெயந்தி சங்கர் நாவல்கள், ஜெயந்தி சங்கர், காவ்யா, சென்னை, பக். 1014, விலை 1000ரூ.
மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களிடம் பணம் இருக்கும். படைப்பாற்றல் இருக்காது என்ற சில இலக்கியவாதிகளின் கருத்து, ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள் என்ற நாவலைப் படித்தால் உடைந்துபோகும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருதுபெற்ற இந்த நாவல், தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் புலம்பெயர்ந்தும் வாழும் பல பெண்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டது. அவர்களது மனப்புண்களைக் காட்டிச் செல்வதோடு, வாசனையும் வலிகொள்ளச் செய்ய, கதாபாத்திரங்களை இன்னும்கொஞ்சம் கூடுதலாகப் பேசவிட்டிருக்கலாம். அல்லது வலியின் அடியாழத்துக்கு எழுத்தால் இழுத்துச் சென்றிருக்கலாம். 2008-இல் வெளியான மனப்பிரிகை. அண்மையில் வெளியான ஓ.கே. கண்மணியின் கதைக்கருவைக் கொண்டது. அந்தப் படத்தில் பேசப்படாதவை இதில் பேசப்படுகின்றன. இத்தொகுப்பில் நெய்தல்(2007), குவியம்(2009), வாழ்ந்து பார்க்கலாம் வாங்க(2006) ஆகிய நாவல்களும் உள்ளன. பிரபலமான எழுத்தாளர்களின் பேசப்பட்ட நாவல்களை ஒரே புத்தகமாக வெளியிடலாம். ஆனால் பிரபலமடையாத அதிகம் பேசப்படாத நாவல்களில் ஐந்தையும், ஒரே புத்தகமாக வெளியிட்டால், முதலில் அதை வாங்கவே வாசகன் தயக்கம் காட்டுவான். சிங்கப்பூர் மலேசிய எழுத்தாளர் என்றால் தயக்கம் இரட்டிப்பாகும். திரிந்தலையும் திணைகள், மனப்பிரிகை இரண்டையும் தனி நாவல்களாக வெளியிட்டிருக்கலாம். நன்றி: தினமணி, 12/10/2015.