தந்தை பெரியார்
வாஸ் (து)தவ சாஸ்திரம், பண்டிட் ஆர். வி. மாரிமுத்து, வெளியீடு – பண்டிட் ஆர். வி. மாரிமுத்து, பக்கம் 104, விலை 60 ரூ.
ஒரு வீடு ஆரம்பிக்கும் விதத்திலிருந்து, புதுமனை புகுவிழா முடிந்து பராமரிப்பது வரை, இன்றைய காலகட்டத்திற்குத் தகுந்தவாறு சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். வாஸ்து என்பது இன்று பலராலும் பின்பற்றப்படுகிறது. இதில் சில அம்சங்களை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. – சிவா
—
தந்தை பெரியார், கவிஞர் கருணானந்தம், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக்கம் 613, விலை 350 ரூ.
தந்தை பெரியார், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வாழ்ந்து, தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சமூக மாற்றங்களுக்கு மூல ஊற்றாகத் திகழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்தது. அவருடைய முழுமையான வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிய உதவும் மிகச்சிறந்த நூல் இது எனலாம். பெரியார் வாழும்போதே, அவருடைய வரலாற்றினை சாமி சிதம்பரனார் எழுதி வெளியிட்ட நூல் ஒன்று உண்டு என்றாலும், அது 1940களுடன் உள்ள சம்பவங்களையே விவரித்தது. அதன் பிறகு அவர் வாழ்ந்து மறைந்த காலம் வரை நிகழ்ந்த சம்பவங்களையும் சேர்த்து, எழுதப்பெற்ற விரிவான நூல் இது. தோற்றம் முதல் மறைவு வரை பெரியார் வாழ்க்கையின் நிகழ்வுகளைக் கால வரிசையில் மிகச்சிறப்பாகத் தொகுத்துள்ளார் கவிஞர் கருணானந்தம். பெரியார் வரலாற்றை முழுமையாக அறிய விரும்புவோருக்கும், ஆய்வு செய்ய விரும்புவோருக்கும், உண்மையான செய்திகளை ஆதாரத்துடன் அளிக்கும் அரிய வரலாற்று நூலாக இது அமைந்துள்ளது. – கவுதம நீலாம்பரன்