தமிழரின் சமையலறை மருந்துகள்
தமிழரின் சமையலறை மருந்துகள், டாக்டர் ஜி. லாவண்யா, மேகதூதன் பதிப்பகம், புதிய எண் 13, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-6.html
இந்நூலாசிரியர் ஹோமியோபதி, சித்த மருத்துவம், ரெய்கி – தியான மருத்துவம், ஹிப்னாடிசம், யோகா, அக்குபஞ்சர் முதலான பல்வேறு இயற்கை மருத்துவ முறைகளைக் கற்பிக்கும் பேராசிரியர். இன்றைய நவீன உலகில் நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், நமது சுற்றுச்சூழல் எல்லாமே மாசடைந்து போயுள்ளன. இதனால் புதிது புதிதாக நோய்கள் தோன்ற, மருத்துவர்களைத் தேடி மக்கள் அலைகின்றனர். நமது முன்னோர், நமக்கு ஏற்படுத்தித் தந்த உணவு முறைகளையும், பழக்க வழக்கங்களையும் ஒதுக்கிவிட்டு, மனம் போன போக்கில் வாய்க்கு ருசியானவற்றை எல்லாம் உண்டு, பருகும் வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொண்டதே இதற்கு காரணம் என்று ஆசிரியர் கூறுகிறார். மற்ற நாடுகளில் இல்லாத உணவு முறை நம்மிடன் உள்ளது. இதை முறையாகப் பயன்படுத்தினாலே நோய் நொடியின்றி வாழலாம் என்கிறார். பூண்டு, புதினா, வெங்காயம், சீரகம், வெந்தயம், கசகசா, மிளகு, இஞ்சி, காரட், கீரைகள், எலுமிச்சை என்று நமது அடுக்களையில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களிலும் பல மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. இவற்றை எப்படிப் பயன்படுத்தினால், என்னென்ன நோய்களைக் கட்டுப்படுத்தலாம், நிவாரணம் பெறலாம் என்பதை இந்நூல் விளக்குகிறது. முக்கியமான சில யோகாசனங்களையும் செய்முறையுடன் ஆசிரியர் விளக்குகிறார். மனஇறுக்கம் முதல் காக்காய் வலிப்பு வரை 50க்கும் மேற்பட்ட நோய்களுக்கு நிவாரணம் கூறுகிறார். எல்லோரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று. -பரக்கத். நன்றி: துக்ளக், 3/10/2013.
—-
அமைதிப்புறா (நாடகம்), எஸ். மதுரகவி, கௌரி பதிப்பகம், 24, ராஜா கிராமணி தோட்டம், மந்தைவெளி, சென்னை 28, பக். 112, விலை 70ரூ.
மனிதகுலத்திற்குத் தேவை போரா? அமைதியா என்ற கேள்விக்கான விடைதான் அமைதிப்புறா நாடகத்தின் மையக்கரு. வழக்காடு மன்றத்தின் மூலம் பெருந்தேவனார், உருத்திரங்கண்ணார், தாமோதரனார் போன்ற புலவர்கள் வாயிலாக போர் பற்றிய செய்தியையும், தீமையையும் விளக்கி, உறவுகள் பற்றிய புதிய பரிமாணங்களை காட்டுவது புதிய முயற்சி. அமைதிப்பாதை என்பது நாடுகளுக்கு மட்டுமல்ல தனி மனிதர்களுக்கும் பொருந்தும் என்பதை முல்லை, மல்லிகை, தாமரை, மரிக்கொழுந்து போன்ற பாத்திரங்கள் வாயிலாக விளக்குகிறார். அமைதிக்குக் குரல் கொடுக்கும் உத்தியிது. நன்றி: குமுதம், 9/10/2013.