தமிழர் உணவு

தமிழர் உணவு, பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 629001,  விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-197-7.html

இந்த நூல் வித்தியாசமான நூல். தமிழர் உணவு பாரம்பரியம் மிக்கது. உண்டால் அம்ம இவ்வுலகம் என்ற புறநானூற்றுப் பாடலானது இந்நாட்டின் அடிப்படை தத்துவமான அன்னம் பகு குர்வீத என்ற தார்மீக வழியில் உருவாக்கிய உணவை பகுத்துண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்து சிறந்த நெறியை அடைய வேண்டும் என்ற கருத்தைப் படம் பிடிக்கிறது. புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர் இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சமூகவியல் துறையில் கல்விசார் பணியில் இருப்பவர் என்பதால், பல்வேறு தலைப்புகளில் தமிழர் உணவு குறித்த கட்டுஐரகளைத் தொகுத்து, நம் பண்பாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அமெரிக்க உணவு வகைகளும், இத்தாலி ரக உணவும், முகலாய உணவும் நம்மைப் புரட்டிப் போடும் இக்காலத்தில் தமிழக மக்களின் அர்த்தமுள்ள உணவு ரசனைகள் இக்கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கின்றன. உணவும் சமூகமும் அல்லது உணவும் பண்பாடும் என்பவை நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்ற ஆசிரியர் கருத்து உண்மையானது. தம் குலத்தில் குறியாக உள்ள விலங்கை உண்ணுதல் விலக்களிக்கப்பட்டதைக் கூறும் ஆசிரியர் பசுவைக் கொல்லுவதும் இந்த விலக்களிக்கப்பட்ட நடைமுறையாகும். இதை இந்தியப் பண்பாட்டின் கூறு என்கிறார். ஐப்பசி அடைமழைக் காலத்தில்மரவள்ளிக் கிழங்கு எப்படி அரிசி தட்டுப்பாட்டைப் போக்கும் உணவாக இருந்தது என சோலை சுந்தரப் பெருமாள் கட்டுரையில் காணலாம். முல்லை நதி சமையல் பற்றி விளக்கும் செல்லக்குமார், கர்நாடகாவில் இருந்து இங்கு வந்து வாழும் ஒக்கலிக காப்பியக் கவுண்டர்கள் உணவில் காணப்பயறுக்கு (கொள்ளு) முக்கியத்துவம் தருவது படிக்க சுவையான தகவல். யானைக்கு வாழைத் தண்டு. ஆம்பளைக்கு கீரைத் தண்டு. ஏன் என்பதை பழமலய் கட்டுரையில் படித்து ரசிக்கலாம். செந்நிற நெல் உடல் உறுதியைத் தரும். பழைய அரிசியில் சமைத்தால் சோறு அதிகமாக இருக்கும் என்று சோழர் கால கல்வெட்டுத் தகவல்கள், ஈழத்து மக்கள் சிலர் கிறிஸ்வராக மதம் மாறிய பின்னும் பரம்பரை வழக்கப்படி சைவ உணவை தொடரும் வழக்கம் சிந்திக்க வைக்கிறது. பச்சைக்கு திரை வாலி தானியச் சோறு சுவையாக இருக்கும் என மேலாண்மை பொன்னுச்சாமி கூறிய தகவல் இன்று பலருக்கு தலையை சுற்றலாம். கம்மங்கஞ்சியோடு தயிர் அல்லது மோர் ஊற்றி கலக்கி குடிக்கலாம். வெஞ்சனம் எலுமிச்சை ஊறுகாய் அல்லது ஊறப்போட்ட மிளகாய் சும்மா கபகபவெனப் போகும் என்பது நாவில் நீர் சுரக்க வைக்கும் தகவல். தெலுங்கு ஆட்சி வந்த பின் கார இனிப்பு வகைகள் கடலை மாவுத் தயாரிப்பில் தமிழகத்தில் கால் பதித்தன. ஆங்கிலேயர் கொண்டு வந்தது ரொட்டி, பிஸ்கட், பாயா, குஸ்கா உருதுபேசிய முஸ்லிம் வருகையின் அடையாளம். தவிரவும் கீரை வறுமையின் அடையாளம் என்பதால் நாட்டார் கோவில்களிலும், சொத்துடைமைக் கோவில்களிலும் கீரை தெய்வ உணவுப் பட்டியலில் இல்லை. இது தவிர சில சாதிகளில் காணப்படும் உணவு முறைகள் பரத்தையர் வீட்டில் இருந்த பிராமணன் உணவு முறை. பரோட்டா வந்தது எப்போது என பல்வேறு தகவல்களும் நூலை வரிவிடாமல் படிக்கத் தூண்டும் வேகமாக மாறி வரும் உலகப் பொருளாதார சூழ்நிலையால் தமிழர்கள் தங்களது உணவுப் பண்பாட்டை அறிய இந்த நூல் உதவிடும். கருத்து வேறுபாடுகள் அதிகம் எழாவண்ணம் நூலைத் தொகுத்து வெளியிட்டவிதம் சிறப்பானது. ஐந்தாண்டு கால முயற்சி, உழைப்பால் ஆசிரியர் இந்த நூலை நேர்த்தியாகப் படைத்திருப்பது பாராட்டுக்குரியது. -எம்.ஆர்.ஆர். நன்றி: தினமலர், 26 பிப்ரவரி 2012.

Leave a Reply

Your email address will not be published.