தமிழர் சமுதாயச் சிந்தனைகள்
தமிழர் சமுதாயச் சிந்தனைகள், க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை 29, விலை 100ரூ.
உலகில் தலை நிமிர்ந்து வாழ்ந்த மனிதன், பின் தங்கிப் போனது ஏன் என்று ஆராய்ந்து, அதுபற்றி நூல்கள் எழுதி வருகிறார் தமிழறிஞர் க.ப. அறவாணன். தமிழர் சமுதாயச் சிந்தனைகள் என்று தலைப்பு கொண்ட இந்த நூலில் தமிழ் மன்னர்கள், தமிழைவிட வட மொழிக்கு அதிக முக்கியம் கொடுத்து, அம்மெழியை வளர்த்தனர் என்று சுட்டிக்காட்டுகிறார். காவிரி ஆறு உற்பத்தி ஆகும் தலைக்காவேரி, முன்பு தமிழர்களின் ஆதிக்கத்தில் இருந்த பகுதி. அதை தமிழ்நாட்டுக்கு உரியதாக உறுதிப்படுத்தி இருக்கலாம். அந்தப் பகுதியில் தமிழர்களைக் குடியமர்த்தி இருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், இன்றைக்கு காவிரிப் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது என்று எடுத்துச் சொல்கிறார். இப்படி, தமிழர்களுக்கு நன்மை பயக்கும் கருத்துக்களுக்கும், யோசனைகளும் குவிந்து கிடக்கின்றன இந்த நூலில்.
—-
வா கடவுள் செய்வோம், வே. விவேக், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 195ரு
கடவுள் மனிதனை செய்தார் என்பதை மறந்து, நாம் நல்லதொரு சமுதாயம் என்ற கடவுளை செய்வோம் என்ற உயரிய தத்துவத்தில், வித்தியாசமான கோணத்தில், புதுமையான, சுவையான கற்பனைகளோடு, புதிய வடிவில் எழுதப்பட்டுள்ள கவிதை நூல் வா கடவுள் செய்வோம். இதனை வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி விமலாவின் மகன் வே. விவேக் எழுதி உள்ளார். சட்டமூம், பொறியியலும் படித்த இந்த இளைஞர் கவிதை தோட்டத்தில் புதுமலராக மலர்ந்துள்ளார். ஒவ்வொரு கவிதையும் அதன் தலைப்பை ஒட்டி அழகாக ஆரம்பிக்கப்பட்டு நிறைவாக நிறைவு செய்யப்பட்டிருப்பது புதிய பரிமானத்தைக் காட்டுகிறது. உண்மையான தாயின் பாசத்தை வார்த்தைகளாய் வடிப்பதற்காக உயிரைக் கொடுத்த தாய் என்று அம்மாவை பற்றிய எழுதப்பட்ட கவிதை, இதயத்தை உருக்குவதுடன், தன்னை அறியாமலேயே கண்களிலிருந்து கண்ணீரையும் வரவழைத்துவிடுகிறது. அதேபோல் அரசு கொடுக்காததை நீ கொடுத்தாய் எனக்கு ஆறடி நிலம் என்ற கவிதை வரிகள் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. நூல் வண்ணப்படங்களுடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு, சர்வதேசத் தரத்துடன் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 3/7/2013