தமிழர் சமுதாய சிந்தனைகள்
தமிழர் சமுதாய சிந்தனைகள், க.ப. அறவாணன், தமிழ்க் கோட்டம், பக். 128, விலை 100ரூ.
பதினாறு தலைப்புகளில் சமுதாயச் சிந்தனைகளை அறவுரையாக, தமிழர் சமுதாயச் சிந்தனைகள் என்ற தலைப்பில் வழங்கியிருக்கிறார் க.ப. அறவாணன். அவ்வப்போது, பல ஏடுகளிலும் (தினமலர் உட்பட) இதழ்களிலும் ஆசிரியர் எழுதிய சமுதாயக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். திருமண வயதைக் குறைத்தால் என்ன? உலகத் தமிழர் கவனத்திற்கு, ஆகிய கட்டுரைகளில், நமது பாரம்பரியத்தை எடுத்துக்காட்டிய அதே சமயம், நடைமுறை சிக்கல்களையும் சொல்லியிருந்தது நல்ல அலசல். ஒவ்வொரு கட்டுரையும் சிந்தனையைத் தூண்டும், விதமாக இருப்பது ஆசிரியரின் எழுத்துக்குக் கிடைத்த சான்று. -ஸ்ரீநிவாஸ்.
—-
ஔரங்கசீப், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 600017, பக். 144, விலை 100ரூ.
சரித்திர நாயகனான அவுரங்க சீப், ஷாஜகானுடனும், தாராவுடனும், ஜஹனாராவுடனும், இறுதியில் தன் மனசாட்சியுடனும் போராடும் காட்சிகளை, நாடக வடிவில் அமைத்துள்ளார் நூலாசிரியர். சந்தர்ப்பவாதிகளுக்கு மதம் அல்லது கொள்கை ஒரு சவுகரியமான கோஷம் என்னும் நுலாசிரியரின் இந்நூல் மற்றொரு பகுதியாக இந்நூலில் நந்தன் கதையும் நாடகமாக இடம் பெற்றுள்ளது. கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதியுள்ள, நந்தனார் சரித்திரத்தை ஒட்டி எழுதப்பட்ட இந்நாடகத்தில், பாரதியாரின் பாடலடிகளும் கையாளப்பட்டுள்ளன. கையிலே இருப்பது கள்ளு, வாயிலே ஒலிப்பது பள்ளு, காலிலே எடுப்பது துள்ளு, சாமியே இதுவென சொல்லு போன்ற இடை இடையே வரும் பாடல்கள், யதார்த்தமான நாடக அமைப்புக்குச் சிறப்பு சேர்த்துள்ளன. -பின்னலூரான். நன்றி: தினமலர், 6/10/2013.