தமிழ்க் கணினியியல் பிரமாணங்கள்
தமிழ்க் கணினியியல் பிரமாணங்கள், இரா. பன்னிருகை வடிவேலன், நோக்கு பதிப்பகம், பக். 62, விலை 65ரூ.
தமிழ் கணினியியலில் இதுவரை என்ன நடந்திருக்கிறது? 1980களிலிருந்து இன்றுவரை கணிசமான முயற்சிகள் நடந்து உள்ளன. அந்த முயற்சிகளை கோடிட்டுக்காட்டி, இன்னும் செய்யப்பட வேண்டியது நிறைய இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது, இரா. பன்னிருகைவடிவேலன் எழுதிய இந்த சிறிய கட்டுரைத் தொகுப்பு. தமிழில் கணினியியல் தொடர்பாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பலவற்றுக்கு, இந்த நூலில் உள்ள ஐந்து கட்டுரைகள் விடைகளைத் தரும். கணினியில் தமிழ், இடைமுகத் தமிழ் உள்ளீட்டு மென்பொருள்கள், திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள்- மதிப்பீடும், எதிர்காலத் தேவையும் ஆகிய கட்டுரைகள், தமிழ் கணினி உலகில் நிகழ்ந்த, முக்கிய முன்னேற்றங்களை வாசகர்களுக்கு தொகுத்துத் தருகின்றன. எந்த ஒரு மொழியிம் கணினியியலில் மேம்பட, செறிவான, செம்மையான, தொடர்ந்து வளரும் தரவகம் (கார்ப்பஸ்) அவசியம். தரவகத்தின் பயன்கள் பற்றியும் நூலாசிரியர் எளிய அறிமுகம் தருகிறார். தமிழ் மென்பொருள் பற்றி ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றவரான பன்னிருகைவடிவேலன், பல ஆய்வரங்குகளில் அளித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் உள்ள கட்டுரைகளுக்காக, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி உட்பட பல அறிஞர்களிடமும், பல அரிய நூல்களிலிருந்தும் தரவுகளைப் பெற்று, எளிய தமிழில் கட்டுஐரகளை வடித்திருக்கிறார் நூலாசிரியர். இலவச மடிக்கணினிகளை, மாணவர்களுக்கு அரசே வழங்கும் இந்த யுகத்தில், எத்தனை தமிழக பள்ளிகளில், கணினியில் உள்ள பல் ஊடக (மல்டி மீடியா) வசதிகளை பயன்படுத்தி, பாடங்கள் போதிக்கப்படுகின்றன? ஏறக்குறைய இல்லை என்பதால், நமது பள்ளிகளில், பல் ஊடக போதனை முறையை வலியுறுத்தி, ஆங்கிலத்தில் அறைகூவல் விடுக்கும் கட்டுரை ஒன்றும் இந்த நூலில் உள்ளது. -சசி. நன்றி: தினமலர், 5/7/2015.