தமிழ்நாடு (நூற்றாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரைகள்

தமிழ்நாடு (நூற்றாண்டுகளுக்கு முந்தைய) பயணக் கட்டுரைகள், ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 340, விலை 260ரூ.

அனுபவங்களின் வழியே ஒரு பயணம் பயண அனுபவங்களைப் பதிவு செய்யும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழில் தொடங்கிவிட்டது. வெளியுலகம் தொடர்பான செய்திகளைத் தனி மனிதர்களின் பயணங்கள்தான் உள்ளூர் மக்களிடம் கொண்டுசேர்த்தன. தமிழில் உரைநடை வளர்ந்துகொண்டிருந்த காலத்திலேயே பயணக் கட்டுரைகளும் எழுதப்பட்டத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கி 1960கள் வரை எழுதப்பட்ட பயணக் கட்டுரைகளின் தொகுப்பாக வெளியான நூல் இது. தமிழில் வெளியான அத்தனை நூல்களையும் பத்திரப்படுத்த வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஏ.கே. செட்டியாரால் தொகுக்கப்பட்ட நூல். முன்னுரையில் அவரே குறிப்பிட்டிருப்பதுபோல், தமிழில் இத்தனை பயணக் கட்டுரைகள் உண்டா என்ற ஆச்சரியத்தை இப்புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் ஏற்படுத்துகிறது. கைரிக்ஷா தொடங்கி, பேருந்து, ரயில், கப்பல், விமானம், ஜீப், பேருந்து என்று சகல வாகனாதிகள் பற்றிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. யாத்திரையின் வகைகள் பயணங்களில் எத்தனை வகை உண்டு என்பதை 1911ல் வெளியான வித்தியாபாநு இதழில் சோமசுந்தரம் பிள்ளை எழுதிய கட்டுரை பட்டியலிடுகிறது. மயிலை கொ. பட்டாபிராம முதலியார் (விஷ்ணு ஸ்தல மஞ்சரி 1908)எழுதிய கட்டுரை, சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், அவற்றின் அருகில் இருக்கும் தங்கும் விடுதிகளின் தரம், சென்னையில் ஓடிய டிராம்கள், பேருந்துகள்பற்றிய தகவல்கள் தொடங்கி காண வேண்டிய இடங்களைப் பட்டியலிடுகிறது. கடைவீதிகளில் வேடிக்கை பார்ப்பதிலேயே மனம் செலுத்தாமல், அப்போதுக்கப்போது தங்களுடைய ஜேபியிலும் மடியிலும் வைத்திருக்கும் பணப் பைகளைக் கவனித்து வர வேண்டும் என்று அக்கறையுடன் எச்சரிக்கிறார். உயர் நீதிமன்றக் கட்டிடத்தில் இருந்த கலங்கரை விளக்கம் பற்றிய விவரணை உட்பட பல தகவல்களைப் படிக்கும்போது, நூற்றாண்டுகளுக்கு முந்தைய சென்னையின் சித்திரம் மனதுக்குள் விரிகிறது. பல கட்டுரைகள், சென்னைக்குள் அன்றாடம் பயணம் செய்பவர்கள் அனுபவித்த சங்கடங்களைப் பதிவு செய்திருக்கின்றன. சொன்ன இடத்தில் நிறுத்தாமல், அதற்கு முன்பாகவே வண்டியை நிறுத்திவிடுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் ஜட்கா வண்டிக்காரர்களைப் பற்றி புகார்ப் பத்திரிம் வாசிக்கிறது, ஜநவிநோதினி (1879) இதழில் வெளியான கட்டுரை. கைரிக்ஷா இழுப்பவர்கள், மாட்டுவண்டி ஓட்டுபவர்கள் என்று அடிமட்டத் தொழிலாளர்களைப் பற்றிக் குறைசொல்லும் கட்டுரைகளில், நடுத்தர வர்க்கத்தின் மனம் பதிவாகியிருப்பதை உணர முடிகிறது. படிப்பறிவில்லாத தொழிலாளர்கள் கட்டுரைகள் எழுதியிருந்தால், அவர்கள் தரப்பு நியாயம் பதிவாகியிருக்கலாம் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இன்றைய நடுத்தர வர்க்கத்தின் மனநிலையையே இந்தப் பதிவுகளும் பிரதிபலிப்பதிலிருந்து நடுத்தர வர்க்க மனநிலை எப்போதும் இப்படித்தான் என்பதையும் உணர முடிகிறது. பயண அவஸ்தைகள் ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் பட்ட துன்பங்களை, தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பல கட்டுரைகள் ஆற்றாமையுடன் விவரிக்கின்றன. மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் நிற்பதற்குக்கூட இடமில்லாமல் பயணம் செய்பவர்களின் நிலை பற்றிய பதிவுகள் அவை. மூன்றாம் வகுப்புப் பெட்டியை பூலோக நரகம் என்று வர்ணிக்கிறார் திரு.வி.க. இரவு முழுவதும் கண்விழித்தலினாலும், ஒருவர் மூச்சு ஒருவர் மீது ஒருவர்மேல் படர்தலினாலும், பிற துன்பங்களினாலும் சகோதரர்கள் அடையும் வேதனையை நரக வேதனைக்கு ஒப்பிடாமல் வேறு எதற்கு ஒப்பிடுவது? என்று கேட்கிறார். பகலில் ரயில் ஏறி, நீண்ட பயணம் செய்யப் பழகிக்கொண்டவர்கள், சிறைவாசகத்துக்குச் சிறிதும் பயப்படத் தேவையில்லை என்கிறது மணிக்கொடி (1933) இதழில் வெளியான கட்டுரை ஒன்று. சென்னை மட்டுமல்லாமல் மகாபலிபுரம், காஞ்சிபுரம் தொடங்கி சேலம், கோயமுத்தூர், திருச்சி என்று பல்வேறு நகரங்களுக்குச் சென்றுவந்த பயண அனுபவங்கள், அந்தந்த ஊர்களின் சிறப்பம்சங்கள், குறைகள், பார்க்க வேண்டிய இடங்கள் என்று பல்வேறு விஷயங்களின் தொகுப்பாகவும் இப்புத்தகம் இருக்கிறது. பாரதியின் பார்வை 1910லேயே விமானம் குறித்த கட்டுரையை எழுதியிருக்கிறார் பாரதி. இந்தியா இதழின் ஆசிரியராக இருந்தபோது எழுதிய அக்கட்டுரையில், விமானம் தயாரிப்பதில் ஐரோப்பிய நாடுகள் காட்டும் ஆர்வத்தைக் குறிப்பிடும் பாரதி, எப்போதும் சோறு சோறு என்று கூக்குரலிடும்படி ஒரு ஜன சமூகத்தை வைத்திருந்தால், விமானங்களைக் குறித்து யோசிக்க மனம் வருமா? எனும் ஆழமான கேள்வியால் ஓங்கி ஒரு குத்துவிடுகிறார். பாபநாசம் தாமிரபருணி ஆற்றங்கரையின் காட்சிகளை வர்ணிக்கும் விதத்தில், அந்தக் காலத்திலேயே எத்தனை யுகங்களைக் கடந்த எழுத்து என்று பரிமிக்க வைக்கிறார். சென்னைத் துறைமுகத்தில் வந்து நின்ற சண்டைக் கப்பலைப் பார்க்கச் சென்ற அனுபவத்தை பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் (புகைக்கப்பல் பார்த்த ஒருவள் என்ற பெயரில்) எழுதியிருக்கிறார். 1893ல் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை முழுக்க முழுக்க கப்பல் பற்றியே பேசினாலும், அந்தக் காலகட்டத்தில் பெண்களின் கல்வி, சுதந்திரம் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனையைக் கிளர்த்திவிடுகிறது. பயணங்கள், வாகனங்களைப் பற்றிய பாடல்களும் புத்தகத்தில் உண்டு. உலகம் சுற்றும் தமிழன் என்று அழைக்கப்படும் ஏ.கே. செட்டியாரே, செறிவான பயணக் கட்டுரைகளை எழுதியவர்தான். எனவே, இந்தத் தொகுப்பின் பின்னணியில் எத்தனை ஆர்வமும் திட்டமிடலும் தேடலும் இருந்திருக்கும் என்பதை வாசகர்களால் உணர முடியும். -வெ. சந்திரமோகன். நன்றி: தி இந்து, 27/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *