தித்திக்கும் தீந்தமிழ்
தித்திக்கும் தீந்தமிழ், கவிஞர் கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், பக். 175, விலை 100ரூ.
கவிஞர் கா. வேழவேந்தன் சங்க இலக்கியம், சமகால இலக்கியம், தமிழகத் தமிழரின் படைப்புகள், புலம்பெயர் தமிழரின் ஆக்கங்கள் என்று ஒன்றுவிடாமல் தன் ஆய்வுப் பார்வையைச் செலுத்தி தீந்தமிழின் சுவையை அள்ளித்தரும் தொகுப்பு நூல் இது. அண்ணாவின் உயர் தனிப் பண்புகள், பெரியார், காந்தியடிகள், மு.வ.வின் பெருமைகள் என்று சான்றோர் பலரின் எளிமை, நேர்மை, ஒழுக்கத்தை, மன உறுதியை, கொள்கைப் பிடிப்பை மற்றவர் உணர்ந்து நடக்கும் வகையில் திறம்படத் தந்துள்ளார். திருக்குறளை தேசிய இலக்கியமாக்க இவர் வாதிடுகிறார். அதற்கு பெர்னாட்ஷாவையும் இங்கர்சாலையும் சாட்சியாக்குகிறார். மனிதகுலம் பெற்றே தீரவேண்டிய உயர்பண்புகள் நம் நீதிநூல்களில் கொட்டிக் கிடப்பதை கிளறிக் காட்டுகிறார். காந்தியடிகளின் தமிழ்த் தொடர்ப்பு, புலம் பெயர்ந்தோரின் சிதறடிக்கப்பட்ட வாழ்வை, அவர்கள் சாதித்த வரலாற்றை எடுத்தியம்புகிறார். பாவேந்தரின் புரட்சி விதைக்கு புதிய நீர் பாய்ச்சுகிறார். இப்படி எதைத்தொட்டாலும் தீந்தமிழின் சுவை குன்றாது எதுகை மோனை நடையில் தந்திருப்பது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 6/7/2015.
—-
அடால்ஃப் ஹிட்லர், சித்தார்த்தன், கண்ணப்பன் பதிப்பகம், பக். 160, விலை 100ரூ.
ஐரோப்பிய வரைபடத்தையே மாற்றியமைத்தவர் ஹிட்லர். உலக வரலாற்றின் பல பக்கங்களுக்குச் சொந்தக்காரர். பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை தன் காலடியில் விழவைத்தவர். பெரிய ஹிட்லர்ன்னு நெனைப்பு என்று வீரமிக்கவர்களை அடையாளப்படுத்தும் ஒரு ரோல்மாடலாக விளங்கியவர். அவரைப் போன்ற நாட்டுப்பற்று மிக்கவரை அக்காலத்தில் காண்பது அரிது. தாய்நாட்டை தூக்கி நிறுத்த தன்னையே அழித்துக்கொண்டவர். மற்றவர்களின் மனஓட்டத்தை எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவர். அதேசமயம், மற்றவர்களுக்குப் புரியாத புதிராக விளங்கியவர். தன்மானத்திற்கு இலக்கணமே ஹிட்லர்தான். தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன்மானத்தைக் காத்தவர். சர்வாதிகாரிதான். ஆனாலும் அவருக்குள்ளும் பல நற்குணங்கள் குடிகொண்டிருந்தன என்பதை அவரது இளமைக்காலம் முதல் மரணம் வரையான வரலாறு கொண்டு விளக்கும் அருமையான நூல். நன்றி: குமுதம், 6/7/2015.