நான் கண்ட மாமனிதர்கள்
நான் கண்ட மாமனிதர்கள், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 152, விலை 70ரூ.
பேராசான் டாக்டர் மு. வரதராசனார், கிராமங்களுக்காக வாழ்ந்த கர்மயோகி ரா. குருசாமி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார், காந்தியப் பேராசான் மகரிஷி க. அருணாசலம், காந்தியடிகள் கனவுகண்ட கிராம சுயராஜ்யத்தை உருவாக்க வாழ்நாளெல்லாம் தொண்டு செய்த கோ. வேங்கடாஜலபதி, அன்னைதெரசா போல் தமிழகத்திற்கு சேவை செய்த பெல்ஜியத்தைச் சேர்ந்த அன்னை லியோபிரவோ, மக்கள் தலைவர் ப. ஜீவானந்தம், தனித்துவம்மிக்க சர்வோதயத் தலைவர் ச.ஜெகந்நாதன், காந்தி முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி, பேராசிரியர் நா. வானமாமலை, எழுத்தாளர் நா. பார்த்தசாரதி, பேராசிரியர் மா.ரா.போ. குருசாமி, அண்ணாச்சி மாரியப்பன், வீ. செல்வராஜு, டாக்டர் மு. அறம் போன்ற பெருமகனார்கள் பலரின் வாழ்வையும் அவர்களின் காந்திய, சமுதாயத் தொண்டையும் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 6/7/2015.
—-
பாலுமகேந்திரா நினைவுகள், செ. கணேசலிங்கன், குமரன் பப்ளிஷர்ஸ், விலை 60ரூ.
நண்பனின் நினைவுகள் பாலுமகேந்திராவின் ஐம்பது ஆண்டு கால நண்பரும், மூத்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவருமான செ. கணேசலிங்கன் எழுதிய நினைவுக்குறிப்புகள் இவை. சினிமாவே உனது எதிர்காலம் என்று சொல்லி பாலுமகேந்திராவை இலங்கையிலிருந்து அனுப்பிவைத்தது தொடங்கி, பாலுமகேந்திராவின் இறுதிக்காலம் வரை அவரது வாழ்வை நெருங்கிப் பார்க்க வைக்கிறது இந்தப் புத்தகம். சிதறலான, சுருக்கமான நினைவுகூரல்களாய், வெட்டென்று தாவிப்போகும் உணர்வைக் கொடுத்தாலும் பாலுமகேந்திரா ரசிகர்கள் அறிந்துகொள்ளப் பல செய்திகள் இதில் உள்ளன. பாலுமகேந்திரா சந்தித்த அந்தரங்கமான நெருக்கடிகள் குறித்து சில தெரியவராத செய்திகளும் இப்புத்தகத்தில் சொல்லப்படுகின்றன. பாலுமகேந்திரா என்ற திரைக் கலைஞரின் பயணத்தை அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு உதவும் நூல் இது. -ஷங்கர். நன்றி: தி இந்து, 27/6/2015.