தராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்(இராசராசேச்சரம்)

தராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்(இராசராசேச்சரம்), முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், சுவாமி தயானந்தா அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், பக். 570, விலை 1000ரூ.

திருத்தொண்டர் புராணத்தை வரலாறாக பதிவு செய்தவர் தெய்வத்தமிழ் சேக்கிழார், பெரியபுராணம் வரலாற்று ஆவணம். அலகில் சோதியன், அம்பலத்தாடுவானின், அன்பை விளக்கும் அருள் நூல். முதல் மந்திரியாக இருந்தவர் சேக்கிழார். அப்போது குலோத்துங்க மன்னன் ஆட்சி இருந்தது. அம்மன்னன் மகன், சேக்கிழார் காலத்தில், அத்திருத் தொண்டர் புராணத்தை, கலை நுட்பத்துடன் வடித்தெடுத்த அருமை. தராசுர சிற்பங்களில் இன்று ஆவணமாக திகழ்கிறது. கயிலையில் துவங்கி, கயிலையில் முடியும் இப்புடைப்பு சிற்பங்களை, அதன் நுட்பங்களை திருத்தொண்டர் புராண தெளிவுடன், சிறந்த படங்களுடன் ஆய்வு செய்து, இந்நூலைப் படைத்த ஆசிரியர் போற்றுதற்குரியவர். வெறும் கட்டுரைத் தொகுப்பல்ல. ஆதாரங்கள், ஆய்வுகள், படங்கள், அதில் உள்ள சிறப்பு செய்திகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, பெரியபுராணம் இந்த மண்ணின் மணம் பரப்பும் தெய்வீகச் சொத்து என்பதுடன், சிவனை வழிபடுவோர் மாண்புகளையும் சொல்கிற பாங்கை, அதிகம் உணர வாய்ப்பளிக்கிறது. நம்நாடு, நமது கலாச்சாரப் பெருமை, அதன் விழுமிய தன்மை ஆகியவற்றை வலியுறுத்தும் அருளாளர் தயானந்தா சுவாமிகள், இதற்கு ஆதரவு தந்து நூலை நிறைவாக உருவாக்க உதவிய பாங்கையும் பார்க்கும்போது, இந்த நாட்டின் ஆன்மிக உணர்வு மேலும் வளர, எவ்வித ஆரவாரமும் இன்றி பணியாற்றும் பண்பு புலனாகிறது. திருத்தொண்டர் புராணத்தில் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் என்று இயற்பகை நாயனாரை குறிக்கும் தொடர் உண்டு. இயற்பகை நாயனாரின் அபார ஈகை குணத்தை சோதிக்க ஆடல்வல்லான், அவர் காதல் மனைவியை கேட்டபோது, மெய்த்தவர்க்கு சற்றும் முகம் கோணாது தந்து சிறப்பு பெற்றவர் இயற்பகையார். கணவரின் முடிவைக் கேட்ட காரிகை மனம் கலங்கியபோதும், கணவர் தவறு செய்ய மாட்டார் என்று நம்பி அப்பெண் மணி, அடியார் உருவில் வந்த சிவபெருமான் உடன் செல்ல முற்பட்டபோது, சுற்றத்தார் பலரும் அதைத் தடுக்க வந்தபோது, அவர்களை வாளால் வெட்டி சாய்த்தார் இயற்பகை நாயனார். முறை தவறாத மாண்பமை மனைவி, ஈகைக் குணத்தை லட்சியமாக கொண்ட இயற்பகை செயலைக் கண்ட, இறைவன், அவரை பழுதிலாய் என்று அழைத்து நின்மனைவியுடன் நம்பால் வருக என்றழைத்தார். இக்காட்சித் தொடர்கள் தனிமாடத்தில் சிற்பமாக உள்ளன. சிவனடியாராக வந்த பெருமான், சிற்றாடை மட்டும் அணிந்த நிலை, இயற்பகைக்கு கணுக்கால் வரை ஆடை, இயற்பகை மனைவியார் காதில் கொண்டையுடன் காணும் பாங்கு, கடைசியில் மாதொருபாகனாக சிவபெருமான் விடைமீது அமர்ந்து, காட்சி தரும் நிலை (பக். 130) ஆகியவற்றை விளக்கிய விதம், அனைவரது உள்ளத்தையும் தொடும். பெரிய புராண நிகழ்வுகளை வரிசையாக, ஆதாரங்களுடன் விளக்கியதும், அதில் வழக்கமான பொருள் கொள்ளும் முறை தவிர, அடிப்படை ஆதாரங்களுடன் அதற்கு நேர்த்தி கண்டு, சேக்கிழார் பெருமையை உணர்த்தியதுடன், சைவத் தமிழ் ஏற்றத்தை விளக்கும் ஆசிரியர் பணி அளவிடற்கரியது. ஆசிரியர் அரை நூற்றாண்டு காலம் உழைத்து உருவாக்கிய நூல், ஆதலின் அவரை ஏற்றுவோம், போற்றுவோம் என்று சேக்கிர் அடிப்பொடி முது முனைவர் தி.ந.இராமச்சந்திரன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை, நூலைப் படிக்கும்போது உணரமுடியும். தமிழ் மட்டுமல்ல. கோயில் கலை மட்டுமல்ல, நமது கலாசாரத்தை படம் பிடிக்கும் நல்ல நூல்கள் வரிசையில் இது மிகவும் சிறப்பானது. நன்றி: தினமலர், 16/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *