தலைவன் இருக்கின்றான்

தலைவன் இருக்கின்றான், நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, பேரிளம் பதிப்பகம், எண்-கிருட்டிணா நகர், பம்மல், சென்னை 75, விலை 120ரூ.

சிவாஜியை நடிகர்திலகமாக நேசித்தவர்கள்கூட, அவர் தமிழக அரசியலில் 30 ஆண்டுகாலம் அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். தி.மு.க. தலைவர் அண்ணாவின் இதயத்தில் முதல் தம்பியாக இருந்தவர், பிறகு அரசியல் சதுரங்கத்தில் இடம் மாறி காங்கிரசுக்கே எல்லாமுமாய் ஆனார். பெருந்தலைவரன் அன்பைப் பெற்ற சிவாஜி, காங்கிரஸ் கட்சிக்காக தன் வருமானத்தின் பெரும்பகுதியை செலவிட்டு கட்சி வளர்த்த தகவல்களை நூலாசிரியர் விவரித்திருக்கும்விதம், நிஜமாகவே அதிர்ச்சிப் பக்கங்கள். ஒரு கட்டத்தில் சிவாஜி மன்றம் மூலம் காங்கிரசில் வளர்ந்த தலைவர்கள்கூட அவருக்கான மரியாதையை தரத்தவறியதும், சிவாஜிக்கு கிடைக்கவிருந்த பாரத் பட்டத்தை தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரே தடுத்த அவலமும் நெஞ்சை அடைக்கும் சோகங்கள். நேர்மையானவர்கள் அரசியலில் சோபிக்க முடியாது என்பதற்கு சிவாஜியை உதாரணம் சொன்ன நூலாசிரியர். அணைத்துக் கொண்டே அவரின் முதுகில் குத்திய அரசியலையும் தைரியமாகவே இனம் காட்டியிருக்கிறார்.  

—-

 

தமிழ் அறிஞர்களும் தமிழ் இலக்கியமும், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ.

வ.உ.சிதம்பரனார், பாரதியார், பாரதிதாசன், மகாவித்துவான், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர், பரிதிமாற்கலைஞர் உள்பட 100 தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய புத்தகம். வாழ்க்கைக் குறிப்புகளை, கேள்வி-பதில் ரூபத்தில் எழுதியுள்ளார். மு.அப்பாஸ் மந்திரி நேரடியாகவே எழுதியிருந்தால் இன்னும் கூடுதல் விவரங்களைச் சேர்த்திருக்க முடியம். எனினும், இது பயனுள்ள நூல் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, புத்தகத்தின் பின்பகுதியில், சங்கப்புலவர்கள் 552 பேர்களின் பெயர்ப்பட்டியல், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றைப் பாடிய புலவர்கள், சங்ககாலப் பெண் புலவர்கள், தமிழ் அகராதிகள், அவற்றை உருவாக்கியவர்கள் யார் என்ற விவரம் முதலியவை இடம் பெற்றிருப்பது இந்நூலை ஓர் இலக்கியக் களஞ்சியம் என்று சொல்ல வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 30/10/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *