தினமணி தீபாவளி மலர் 2012
தினமணி தீபாவளி மலர் 2012, விலை 100ரூ.
வீணை சிட்டிபாபுவின் கச்சேரி ஒன்றைக் கேட்ட ரிக்க்ஷாத் தொழிலாளி ஒருவர், கச்சேரி முடிந்தவுடன் இரண்டு ஒரு ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாகத் தந்தாராம். ஐயா தினமும் நான் அஞ்சு, ஆறு ரூபாய் சம்பாதிப்பேன். சம்பாக்கிறதில் பாதிக்குக் குடிச்சுருவேன். நீங்க வாசிக்கறதைப் பார்த்துட்டு இருந்துட்டன். குடிக்கணும்னே தோணலை… என்றும் சொன்னாராம். இந்த அருமையான நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார் சுந்தர் சி. பாபு, அன்புள்ள அப்பா என்னும் தலைப்பில் பாவேந்தர், கருமுத்து தியாகராயர், பி.ஆர். பந்துலு, நடிகர் ஜெய்சங்கர், அகிலன் இவர்களின் வாரிசுகள் பகிர்ந்து கொண்டுள்ள நினைவுகள் மதிப்புமிக்கவை. விம்மினேன் வானம் பார்த்து, தாயகம் திரும்புகிறது சைபீரிய வாத்து என்று ஒரு கவிதை. காசி ஆனந்தன் எழுதியது. இப்படி அருமையான, தங்களுக்குப் பிடித்த மணிக்கவிதைகளைப் பற்றி ஜெயபாஸ்கரன், புவியரசு ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ள உணர்வுகளும் அருமை. கவிஞர் அப்துல் ரஹ்மான் தம்மைக் கவர்ந்த மைதிலி மொழிக் கவிதையைப் பற்றி எழுதுகிறபோது, கவிஞன் தன் கவிதைக்கான சொற்களுக்காகத் தவம் இருக்கிறான். சில நேரங்களில் சலங்கை கட்டிய அழகான சொற்கள் மேனகையைப்போல் வந்து அவன் தவத்தைக் கெடுப்பதும் உண்டு என்கிறார். கவிஞரின் எழுத்துக்கள் முழுவதுமே ஓர் உயரிய கவிதை. நா. பா. சி. சு. செல்லப்பா, ஜெயகாந்தன், மெரினா ஆகியோரின் மகத்தான படைப்புக்களிலிருந்து கொஞ்சம் மாதிரிக்குத் தந்திருக்கிறார்கள். அதேபோல் தேவன், சாவி, சோ, மகாகவி பாரதியின் எழுத்துகளையும் தந்திருப்பது சிறப்பு. மகாகவி பாரதி, காக்காய் பார்லிமென்ட் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள பகுதியில் ருஷ்ய தேசத்து 120 கட்சியார் பரஸ்பரம் செய்யும் இம்சை பொறுக்காமல் என்று இந்தியாவுக்கு வருகிற காக்கையைப் பற்றிப் படிக்கிறபோது இங்கேயுள்ள நிஜத்தின் வெப்பத்தையும் மீறிச் சிரிப்பு வருகிறது. ஆன்மீகம் இல்லாமல் தீபாவளிமலர் வெளியிட முடியுமா? ஓவியர்கள் வேதா, பத்மவாசன், முருககனி போன்றோரின் வண்ணப்படங்களோடு ஒன்பது அம்மன்களைத் தரிசனம் பண்ண வைத்திருக்கிறார்கள். அசோகமித்திரன், சா. கந்தசாமி, இந்துமதி போன்றோரின் சிறுகதைகளோடு அமரர் கல்கியின் பவானி பி.ஏ.பி.எல், குறுநாவலும் விஷய கனத்தை அதிகப்படுத்துகின்றன. இந்த மலரில் அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் தங்கள் தலைவர்களின் படத்தைப்போட்டு, தீபாவளி வாழ்த்துச் சொல்லி விளம்பரம் தந்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது. நன்றி: கல்கி, 6/1/13.
—-
நல்லவன் வெல்வது எப்படி? பவான் சவுத்ரி, WVPD. 649. 04U. Udyog Vihar. Phase V. Gurzon. Haryama 122 001. பக். 186, விலை 150ரூ.
நேர்மையற்றவன் செயல்படும் விதங்கள், நேர்மையாளன் எழுச்சி பெறுவதற்கான வழிகள், ஆளுமையின் நிலைத்திருக்கும் அடித்தளங்கள், என்னும் மூன்று பெரும் தலைப்புகளுக்குள் 62 சிறு சிறு கட்டுரை வடிவான வழிமுறைகள், நுட்பங்களை வரலாற்றுப் பின்னணிகள், அறிஞர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகள், பழமொழிகள், அனுபவப் பொன்மொழிகள் என, ஆங்காங்கே சான்றாதாரங்கள் தந்து, மிகவும் விறுவிறுப்பான நடையில் நூலை அமைத்துள்ளார் நூலாசிரியர். எந்த மலரின் நறுமணமும், காற்றுக்கு எதிர் திசையில் பரவுவதில்லை. ஆனால் நல்லியல்பின் நறுமணம் காற்றை எதிர்த்துப் பரவுகிறது. நேர்மைத் திறன் மிக்க மனிதன் தனது நறுமணத்தை அனைத்துத் திசைகளிலும் பரப்புகிறார்(பக். 137). ஓர் ஆட்சியாளரின் அறிவுக்கூர்மையை மதிப்பிடுவதற்கான முதலாவது வழி, அவரைச் சுற்றிலும் அணுக்கமாக உள்ளோரின் தகைமையைக் கணிப்பதாகும் (மாக்கியவல்லி) (பக். 146). வையத் தலைமை கொள் என்ற பாரதியின் வாக்கை நிறைவேற்றத் துடிக்கும் அனைவரும், அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள வழிகாட்டி நூல். -பின்னலூரான். நன்றி; தினமலர், 6/1/13.