தியானம் யோகம் ஞானம் (ஒளியைத் தேடி ஒரு பயணம்)
தியானம் யோகம் ஞானம் (ஒளியைத் தேடி ஒரு பயணம்), சி.எஸ். தேவநாதன், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாகக்ம், சென்னை 49, பக்கங்கள் 184, விலை 110ரூ. மனிதன் மனிதனாக இருக்கிறானா? மிருகமாக மாறிக்கொண்டிருக்கிறானா? இறை நம்பிக்கை இருக்கிறதா? இறைவன் இருக்கின்றான் என நம்புகின்றானா? இந்த உடம்புக்கும், உயிருக்கும் நடுவே இருந்து செயல்படும் கண்களுக்குப் புலப்படாத ஆன்மா பற்றி, மனிதன் என்ன நினைக்கிறான்? இதுபோன்ற அடுக்கடுக்கான வினாக்களுக்கு விடைதேடப் பயன்படுவதைத்தான் ஆன்மிகத் தேடல் என சான்றோர்கள் கூறி வருகிறார்கள். இத்தகைய ஒரு ஆன்மிகத் தேடல் குறித்து நம் நினைவுகளை, எண்ணங்களை திருப்ப நினைப்பதுண்டு. ஆனால் செய்வதில்லை. இதற்கு ஒரு தூண்டுகோல் தேவைப்படுகிறது. அத்தகைய தூண்டுகோலாக இந்த நூல் அமைந்துள்ளது என கூறலாம். நூலாசிரியர் முப்பத்தியோரு கட்டுரைகளில் ஆன்மிகம் குறித்து அனேக தகவல்களை எடுத்தக் கூறியிருக்கிறார். எளிய தமிழ்நடையில், குழந்தை கூட புரிந்து கொள்ளும் வகையில் இந்த அரிய நூலை எழுதியிருப்பதற்காக இவரை எத்துணை பாராட்டினாலும் தகும். மேலும், ஒரு கருத்தை எடுத்துச் சொல்ல பொருத்தமான ஒரு கதையையும் சேர்த்திருக்கிறார். உபநிடதம் தொடங்கி, ராமகிருஷ்ண பரமஹம்சர், ஓஷோ வரை பலரின் மேற்கோள்கள் நூலின் மீது மரியாதையை உயர்த்துகிறது. ஆன்மிக அன்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். – ஜனகன்.
—-
உலக மொழிகளில் தமிழ்ச் சொற்களும், இலக்கணக் கூறுகளும், ப. சண்முக சுந்தரம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 113, பக்கங்கள் 183, விலை 85ரூ தமிழ் மிகத் தொன்மையான மொழி. தமிழர் உலகநாடுகள் பலவற்றில் பரந்து விரிந்து வாழ்கின்றனர். மிகப் பழைய காலம் தொடங்கித் தமிழகத்தில் பிற நாட்டவர் பலர் வந்து சென்றனர். வாணிகம் நடத்தினர். இந்த வகையால், உலகமொழிகள் பலவற்றில், தமிழ் மொழிச் சொற்கள் பற்பலவும், தமிழிலக்கணக் கூறுகளும், அமைந்து இருப்பதை ஆராய்ந்து ஒரு சிறந்த நூலைப் படைத்துள்ள ஆசிரியரின் உழைப்பு மிகவும் போற்றத்தக்கது. பிராகிருத மொழியிலும் தமிழின் மூலங்களைக் காட்டுகிறார். அச்சன்-அஜ்ஜ, அத்தன்-அத்த, அத்தை-அத்தா, அப்பன்-அப்ப, இதோ-இதோ, செட்டி-சேட்டி. தமிழ்ச் சொற்கள் வடமொழியில் விளங்குமாறு, தமிழ்-த்ரமிள, படி-பிரதி, பதிகம்-ப்ரதீக, மதங்கள்-மிருதங்கம், மெது-ம்ருது. திராவிட மொழிக் கூறுகள் சுமேரிய மொழியில், சுமேரி-அப்(க), ஆன்(பசு), சுமேரி, அபா-அப்பன், ஊடு-ஆடு, ஊர்-ஊர், தும்-தும்பி, குருன்-குருதி.‘ இவ்வாறாக, நிரம்ப எடுத்துக்காட்டுகள் நூல் முழுதும் காணப்படுகின்றன. மொழிநூல் ஆராய்ச்சியாளர்களும், தமிழார்வலர்களும் படித்தறிய வேண்டிய நல்ல நூல். நன்றி: தினமலர், 05 பிப்ரவரி 2012.